2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை

2578

2017 இல் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுத் தோல்விகளை மாத்திரமே கண்ட இலங்கை கிரிக்கெட் அணி, புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹவின் கீழ் புதிய மாற்றங்களுடன் 2018 இல் களமிறங்கவுள்ளது. ஐ.சி.சி இன் எதிர்கால போட்டி அட்டவணையின்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி 30 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) இதுவரை உறுதி செய்யப்பட்ட அடுத்த வருடத்துக்கான கிரிக்கெட் தொடர்களின்படி இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 போட்டிகள் பங்களாதேஷ் அணியுடனும், 3 போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் அணியுடனும், 2 போட்டிகள் தென்னாபிரிக்க அணியுடனும், 3 போட்டிகள் இங்கிலாந்து அணியுடனும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள்

இதில் முதலாவதாக இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 2 டி20 போட்டிகள் மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் முதலில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி, இதனையடுத்து 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதனையடுத்து இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. 7 போட்டிகளைக் கொண்ட இத்தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டித் தொடர் நிறைவடைந்த பிறகு சுமார் 2 மாதங்களுக்கு இலங்கை அணிக்கு ஓய்வு கிடைக்கவுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளதால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அட்டவணைப்படி எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் அக்காலப்பகுதியில் நடைபெறமாட்டாது.

இந்நிலையில், சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் மே மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள இலங்கை அணி, முதல் தடவையாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடவுள்ளது.

இதன் அடிப்படையில் முதலாவது டெஸ்ட் போட்டி 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06 ஆம் திகதி ட்ரினிடாட்டிலும், 2 ஆவது மற்றும் 3 ஆவது டெஸ்ட் போட்டிகள் முறையே பார்படோஸ் மற்றும் சென். லூசியாவில் 14 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அத்துடன், பார்படோஸிலுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் முதல் தடவையாக இலங்கை அணி விளையாடவுள்ளதுடன், அம்மைதானத்தில் நடைபெறுகின்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு தென்னாபிரிக்க அணி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் 2 டெஸ்ட் மற்றும் 5 ஓரு நாள் போட்டிகளும் நடைபெறவுள்ளது.

இந்தியாவிலிருந்து சிறந்த வீரர்களாக செல்கின்றோம் – நிக் போதாஸ்

இந்த தொடர் நிறைவடைந்த பிறகு 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், பாகிஸ்தான் அணி அங்கு சென்று விளையாடுவதற்கு இந்திய அரசு இதுவரை அனுமதி வழங்காத காரணத்தால் குறித்த தொடரை நடத்துவது இல்லை என இந்திய கிரிக்கெட் சபை, கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. எனவே ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், குறித்த தொடரை இலங்கை அல்லது பங்களாதேஷில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை அணி இவ்வருட இறுதியில் கலந்து கொள்கின்ற இறுதிப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையினால் 2018 இல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போட்டித் தொடர்களாக இவை அட்டவணைப்படுத்தப்பட்டாலும், இன்னும் சில தொடர்கள் மற்றும் போட்டிகளை எதிர்வரும் காலங்களில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 இல் இலங்கை அணி பங்குபற்றவுள்ள போட்டித் தொடர்கள்

மாதம்

அணி

டெஸ்ட்

ஒரு நாள்

டி20

ஜனவரி – பெப்ரவரி பங்களாதேஷ் 5  2 2
மார்ச் இந்தியா – பங்களாதேஷ் 5
ஜுன் மேற்கிந்திய தீவுகள் 3
ஜுலை – ஆகஸ்ட் தென்னாபிரிக்கா 2 5
ஓக்டோபர் – நவம்பர் இங்கிலாந்து 3 5