இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகள் சமநிலையையும் சந்தித்த இலங்கை அணி, 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. இதில் பங்களாதேஷ், ஜிம்பாப்வே அணிகளுடன் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை, முதற்தடவையாக பாகிஸ்தானுடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்நிலையில், 29 ஒரு நாள் போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியையும், 15 டி20 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, இவ்வருடத்தில் தலா 5 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மாத்திரமே வெற்றியைப் பதிவுசெய்தது.

மறுபுறத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் 50 வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடி இருந்தனர். எனினும் கடந்த வருடத்தில் வெறும் 29 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி பங்குபற்றியிருந்ததுடன், அவ்வனைத்துப் போட்டிகளுக்காக 36 வீரர்கள் பயன்படுத்தப்பட்டமை இங்கு சிறப்பம்சமாகும்.

முரளிக்கு நடந்த அநீதிக்கு ஸ்டீவ் வோ கவலை

அதேபோன்று இவ்வருடத்தில் மோசமான துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பினால் இலங்கை அணி பெற்ற தொடர் தோல்விகள் மற்றும் தொடர் உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டெஸ்ட் அணித்தலைமை 2 தடவைகளும், ஒரு நாள் அணித்தலைமை 5 தடவைகளும், டி20 அணித்தலைமை 4 தடவைகளும் மாற்றம் செய்யப்பட்டமை மற்றுமொரு சாதனையாக அமைந்தது.

இதன்படி, இவ்வருடத்தை ஆரம்பித்து ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 3-0 எனவும், ஒரு நாள் தொடரை 5-0 என இழந்ததுடன், 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றியருந்தது.

தென்னாபிரிக்காவுடனான டி20 தொடரைக் கைப்பற்றிய உத்வேகத்துடன் பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இத்தொடரில் இலங்கை அணியின் வெற்றிக்காக சகலதுறையிலும் அசத்திய அசேல குணரத்ன, தொடர்ச்சியாக 2 அரைச்சதங்களை (52 மற்றும் 84) குவித்து தொடரின் நாயகனாகவும் தெரிவாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்திய பங்களாதேஷ் அணி, தாம் பங்குபற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க 200ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி  அவ்வணிக்கெதிராக முதல் டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்தது. அதேபோன்று, இலங்கை அணியின் இளம் வீரர் குசல் மெண்டிஸ் 194 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னி இரட்டை சதத்தைப் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஐ.சி.சியின் சம்பின்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஜுன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி, அத்தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தோல்வியை சந்தித்த அவ்வணி, இந்தியாவுடனான போட்டியில் மாத்திரம் வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் பிறகு மீண்டும் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் மிகவும் மோசமான வரலாற்று தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஒரு நாள் தரப்படுத்தலில் 11ஆவது அணியாகவும், கத்துக்குட்டி அணியாகவும் வர்ணிக்கப்படுகின்ற ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரை 3-2 என இழந்தது. இதனையடுத்து அஞ்செலோ மெதிவ்ஸ் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார். இத்தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக தொடர்ச்சியாக 2 தடவைகள் இரட்டைச்சத இணைப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை ஒரு நாள் அரங்கில் மற்றுமொரு சாதனையாக பதிவாகியது.

ஒரு நாள் தொடரையடுத்து ஜிம்பாப்வே அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, 4 விக்கெட்டுக்களால் போராடி வெற்றிபெற்றது. இதில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், 249 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில், ஜுலை நடுப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி, 3-0 என டெஸ்ட் தொடரையும், 5-0 என ஒரு நாள் தொடரையும், ஓரேஒரு டி20 போட்டியை 1-0 எனவும் வெற்றிகொண்டு இலங்கை அணியை சொந்த மண்ணில் 0-9 என வீழ்த்தி சாதனை படைத்தது.

குறித்த போட்டித் தொடரின் போது இலங்கை ஒரு நாள் அணியின் தலைவராகச் செயற்பட்ட உபுல் தரங்கவுக்கு குறித்த நேரத்துக்கு மேலதிகமாக பந்துவீசிய காரணத்தால் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐ.சி.சி இனால் தடைவிதிக்கப்பட்டது. இதனால் சாமர கபுகெதரவை தலைவராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், குறித்த போட்டியின் பிறகு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட காரணத்தினால் சாமர கபுகெதரவை அணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்த கிரிக்கெட் நிர்வாகம், எஞ்சிய போட்டிகளுக்கு லசித் மாலிங்கவை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தியாவிலிருந்து சிறந்த வீரர்களாக செல்கின்றோம் – நிக் போதாஸ்

இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள…

அதேநேரம், இந்திய தொடரின் போது இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்பட்டாலும், அவரால் குறித்த தொடரில் இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. எனினும், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிக் கொடுத்தார். இந்த டெஸ்ட் தொடர் வெற்றிதான் இலங்கை அணி இவ்வருடத்தில் பெற்ற சிறந்த பெறுபேறாகவும் அமைந்தது.

எனினும், அதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 5-0 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் இலங்கை அணி பறிகொடுத்தது. அத்துடன், இறுதி டி20 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இலங்கை அணியில் இடம்பெற்ற பெரும்பாலான அனுபவமிக்க வீரர்கள் அங்கு சென்று விளையாட மறுத்திருந்தனர். இதனால் திசர பெரேரா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியொன்றை அங்கு அனுப்புவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எது எவ்வாறாயினும், ஆகஸ்ட் மாதம் சொந்த மண்ணில் இந்திய அணியிடம் வைட் வொஷ் தோல்வியடைந்த இலங்கை அணி, செப்டெம்பர் மாதம் மீண்டும் இந்தியாவிற்குச் சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. எனினும்.சொந்த மண்ணில் விளையாடியதை விட இந்திய மண்ணில் இலங்கை அணி ஓரளவு சிறப்பாக விளையாடியிருந்தமையை காணமுடிந்தது.

முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இழந்த இலங்கை அணி, ஒரு நாள் தொடரை 2-1 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் இழந்தது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர்கள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் வாணவேடிக்கை நிகழ்த்தி புதிய சாதனை படைக்க, இலங்கை வீரர்கள் வழமைபோன்று மற்றுமொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும்கையுடன் நாடு திரும்பினர்.

இதேவேளை, இவ்வருட முற்பகுதியில் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தோல்வியை அடுத்து தனது பதவியை இராஜினாமாச் செய்தார். இதனையடுத்து ஜிம்பாப்வே தொடர் முதல் இறுதியாக நடைபெற்ற இந்திய தொடர் வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய நிக் போதாஸ் இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இவ்வருடம் நிறைவடைவதற்கு ஒருசில நாட்கள் எஞ்சியிருக்கும் போது இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான சந்திக ஹத்துருசிங்க, எதிர்வரும் 4 வருடங்களுக்கு இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தனது பதவியைப் பொறுப்பேற்றார்.

எனவே அண்மைக்காலமாக தொடர் தோல்விகள், பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற இலங்கை அணியை, மீண்டும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் பாரதூரமான பொறுப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் தொடருடன் சந்திக ஹத்துருசிங்க ஆரம்பிக்கவுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழுவினர் பதவி விலகியதை அடுத்து, பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து கிரஹம் லெப்ரோய் தலைமையிலான புதிய தெரிவுக் குழுவினரை நியமிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேநேரம், இலங்கை அணியின் முகாமையாளராகவும், தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் முன்னாள் வீரரான அசங்க குருசிங்கவின் நியமனம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவராகச் செயற்பட்ட ஜயந்த தர்மாசவின் திடீர் இராஜினாமா உள்ளிட்ட விடயங்களும் 2017இல் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களாகப் பதிவாகின.

உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?

இந்நிலையில், இவ்வருடத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரராக நிரோஷன் திக்வெல்ல விளங்குகிறார். அவர் இவ்வருடம் 57 போட்டிகளில் (46 இன்னிங்ஸ்) விளையாடி 2 சதங்கள் மற்றும் 11 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1832 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அதேநேரம், 11 டெஸ்ட் போட்டிகளில் 22 இன்னிங்சுகளுக்காக விக்கெட் காப்பிலும் ஈடுபட்ட திக்வெல்ல, டெஸ்ட் போட்டிகளில் 38.32 சராசரியுடன் 773 ஓட்டங்களையும், 26 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம் மற்றும் 4 அரைச்சதங்களுடன் 826 ஓட்டங்களையும், 9 டி20 போட்டிகளில் 233 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

2017இல் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்கள்

வீரர்கள் போட்டிகள் சராசரி 100 50 ஓட்டங்கள்
நிரோஷன் திக்வெல்ல 46 33.92 2 11 1832
உபுல் தரங்க 43 35.04 3 8 1612
தினேஷ் சந்திமால் 30 33.97 3 6 1291
குசல் மெண்டிஸ் 37 27.86 3 5 1282
அஞ்செலோ மெதிவ்ஸ் 29 38.83 2 6 1165
திமுத் கருணாரத்ன 13 39.65 3 4 1031

இந்நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஓட்டங்களைக் குவித்து வந்த நிரோஷன் திக்வெல்ல, கடைசி 4 ஒரு நாள் போட்டிகளிலும் 5ஆம் இலக்கத்தில் களமிறங்கி குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்படி, இவ்வருடத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த 2ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

2017இல் ஒரு நாள் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்கள்

வீரர்கள் போட்டிகள் சராசரி 100 50 ஓட்டங்கள்
உபுல் தரங்க 25 48.14 2 6 1011
நிரோஷன் திக்வெல்ல 26 33.04 2 4 826
குசல் மெண்டிஸ் 22 27.95 1 4 587
அஞ்செலோ மெதிவ்ஸ் 15 63.66 1 3 573
தனுஷ்க குணதிலக 15 35.93 1 4 539
அசேல குணரத்ன 19 37.15 1 1 483
லஹிரு திரமான்ன 10 36.00 0 4 360
தினேஷ் சந்திமால் 15 18.21 0 1 255

நிரோஷன் திக்வெல்லவைப் போன்று அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரராக உபுல் தரங்க விளங்குகிறார். 43 போட்டிகளில் விளையாடிய அவர், 1612 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 25 ஒரு நாள் போட்டிகளில் 48.14 சராசரியுடன் 1011 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய திமுத் கருணாரத்ன, 1031 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், 12 போட்டிகளில் விளையாடிய தினேஷ் சந்திமால் 1003 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். திக்வெல்ல (773), குசல் மெண்டிஸ் (669), அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் முறையே 3, 4 மற்றும் 5ஆவது இடங்களில் உள்ளனர்.

2017இல் டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்கள்

வீரர்கள் போட்டிகள் சராசரி 100 50 ஓட்டங்கள்
திமுத் கருணாரத்ன 13 39.7 3 4 1031
தினேஷ் சந்திமால் 12 45.6 3 5 1003
நிரோஷன் திக்வெல்ல 11 38.7 0 6 773
குசல் மெண்டிஸ் 10 33.5 2 1 669
அஞ்செலோ மெதிவ்ஸ் 9 29.1 1 2 524

இதன்படி, 2017இல் இலங்கை அணிக்கு முகங்கொடுக்க நேரிட்ட கசப்பான சம்பவங்கள், கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு மலரவிருக்கும் 2018இல் புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

2017இல் இலங்கை அணியின் பதிவுகள்

டெஸ்ட் தொடர்கள்

தென்னாபிரிக்கா 2 – 0 தோல்வி
பங்களாதேஷ் 1 – 1 சமநிலை
ஜிம்பாப்வே 1 – 0 வெற்றி
இந்தியா 3 – 0 தோல்வி
பாகிஸ்தான் 2 – 0 வெற்றி
இந்தியா 1 – 0   தோல்வி

ஒரு நாள் தொடர்கள்

தென்னாபிரிக்கா 5 – 0 தோல்வி
பங்களாதேஷ் 1 – 1 சமநிலை
சம்பியன்ஸ் கிண்ணம் 2 – 1 தோல்வி
ஜிம்பாப்வே 3 – 2 தோல்வி
இந்தியா 5 – 0 தோல்வி
பாகிஸ்தான் 5 – 0 தோல்வி
இந்தியா 2 – 1   தோல்வி

டி20 தொடர்கள்

தென்னாபிரிக்கா 2 – 1 வெற்றி
அவுஸ்திரேலியா 2 – 1 வெற்றி
பங்களாதேஷ் 1 – 1 சமநிலை
ஜிம்பாப்வே 1 – 0 வெற்றி
இந்தியா 1 – 0 தோல்வி
பாகிஸ்தான் 3 – 0 தோல்வி
இந்தியா 3 – 0   தோல்வி