ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்

2206
Player contract issue

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுத் தொடர்களில் விளையாடுவதற்கான வீரர்கள் ஒப்பந்தத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் 25 பேர் வரையில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> ஒன்பது அறிமுகவீரர்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில்நுட்பக்குழு கடந்த மே மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் 24 வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தினை அறிவித்ததில் இருந்து, குறித்த ஒப்பந்தம் தொடர்பில் சிக்கல்கள் பல நிலவி வந்ததுடன், இந்த ஒப்பந்தத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.    

எனினும், கடைசியாக நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த வீரர்கள் தற்போது இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பத்தினை இட்டிருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒப்பந்த இழுபறி நிறைவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணியினர் நேற்று (06) இலங்கை வந்து வீரர்கள் அனைவரும் கொழும்பு தாஜ் சமூத்ரா ஹோட்டலில் உருவாக்கப்பட்டுள்ள உயிர்க்குமிழி வளையினுள் (Bio-Bubble) தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு திரும்பிய வீரர்கள் அனைவருக்கும் இம்மாதம் 13ஆம் திகதி இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆரம்பமாகவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இன்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  

இந்த ஒப்பந்தத்தில் நேற்று (06) இரவு வரை சில வீரர்கள் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், அனைத்து வீரர்களும் குறித்த ஒப்பந்தத்துடன் உடன்பட்டிருக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்ததது. இவ்வாறாக விடயங்கள் குழப்பம் நிறைந்ததாக இருந்த சந்தர்ப்பம் ஒன்றிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும்  தற்போது இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

>> இலங்கை U19 பயிற்சி முகாமில் யாழ். வீரர்கள் இருவர்!

இதேநேரம், உயிர்க்குமிழி வளையினுள் உள்ள இலங்கை அணியினர் முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக வழங்கப்படும் வருடாந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத சந்தர்ப்பம் ஒன்றிலேயே சென்று அங்கே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தததோடு இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து புறப்பட முன்னர் வீரர்களை மதிப்பிடுவதற்கான பிரத்தியேகமான அமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்படும் என எழுத்து மூலம் வீரர்களுக்கு அறிவித்திருந்ததனை அடுத்தே இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்களும் நடைபெற்றிருந்தன.

இந்நிலையில் வீரர்கள் அனைவரும் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட்  சுற்றுத்தொடர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கும் காரணத்தினால் இந்த தொடருக்கான 20 பேர் அடங்கிய இலங்கை குழாம் நாளை (08) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<