ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டி – சிறப்புக் கண்ணோட்டம்

227
Euro CUp Finals

15-வது ஐரோப்பிய (யூரோ) கிண்ண  கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10ஆம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22ஆம் திகதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்த்துக்கல், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, வேல்ஸ், பெல்ஜியம், சுலோவாக்கியா, போலந்து, வடக்கு அயர்லாந்து, குரோஷியா, அங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து குடியரசு ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன .

ருமேனியா, அல்பேனியா, ரஷியா, சுவீடன், உக்ரைன், துருக்கி, செக்குடியரசு, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தொடக்க சுற்றிலேயே வெளியேற்றப்பட்டன.

2-வது சுற்று ஆட்டங்கள் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் போலந்து, போர்த்துக்கல், வேல்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஐஸ்லாந்து ஆகியவை கால்இறுதிக்கு முன்னேறின. ஸ்பெயின், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, குரோஷியா, வடக்கு அயர்லாந்து, அங்கேரி, அயர்லாந்து குடியரசு, சுலோவாக்கியா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

கால்இறுதி ஆட்டங்கள் 30ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி  வரை நடந்தன. போர்த்துக்கல், வேல்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. போலந்து, பெல்ஜியம், இத்தாலி, ஐஸ்லாந்து ஆகியவை கால்இறுதியில் வெளியேறின.

கடந்த 6 ஆம் திகதி  நடந்த முதல் அரை இறுதியில் போர்த்துக்கல்  2-0 என்ற கோல் கணக்கில் வேல்சையும், 7 ஆம் திகதி  நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனியையும் தோற்கடித்தன.

ஐரோப்பிய கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டி இன்று  நடக்கிறது. இதில் பிரான்ஸ்- போர்ச்சுக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அணி ஐரோப்பிய கோப்பையை கைப்பற்றும் என்று கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பிரான்ஸ் அணி 2 முறை ஐரோப்பிய கோப்பையை கைப்பற்றி உள்ளது. 1984 மற்றும் 2000-ம் ஆண்டு அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது 3-வது முறையாக ஐரோப்பிய கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் பிரான்ஸ் கூடுதல் பலத்துடன் உள்ளது. போர்ச்சுக்கலுடன் ஒப்பீடுகையில் அந்த அணி கோப்பை வெல்ல சற்று அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அன டோனியோ கிரிஸ்மான் உள்ளார். அவர் இந்தப் போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து உள்ளார். அரைஇறுதியில் 2 கோல்கள் அடித்து இருந்தார். இறுதிப்போட்டியிலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இது தவிர ஆலிவர் கிரவுட், டிமிட்ரி பேயட் போன்ற சிறந்த வீரர்களும் பிரான்ஸ் அணியில் உள்ளனர். இருவரும் தலா 3 கோல்கள் அடித்து உள்ளனர்.

தோல்வியை தழுவமால் நேர்த்தியுடன் விளையாடும் பிரான்ஸ் இறுதிப் போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தும்.

போர்த்துக்கல் அணிலீக்ஆட்டத்தில் தடுமாறியேநாக்அவுட்சுற்றுக்கு முன்னேறியது. 2-வது சுற்றில் கூடுதல் நேரத்திலும் கால்இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டிலும் வெற்றியை பெற்றன. ஆனால் அரைஇறுதியில் சிறப்பாக விளையாடியது.

அந்த அணியின் நட்சத்திர வீரராக கிறிஸ்டி யானோ ரொனால்டோ உள்ளார். அவர் 3 கோல்கள் அடித்துள் ளார். அரைஇறுதியில் அவர் தலையால் முட்டி எடுத்த கோல் மிகவும் சிறப்பாக இருந்தது. 2-வது கோல் விழவும் அவர் உதவியாக இருந்தார்.

இதுதவிர லுயிஸ் நானி, ரிச்சார்ட்டோ குரேஷ்மா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். போர்ச்சுக்கல் இதுவரை ஐரோப்பிய கோப்பையை வென்றது இல்லை. 2004-ல் 2-வது இடத்தை பிடித்தது. தற்போது முதல் முறையாக ஐரோப்பிய கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

பிரான்ஸ் போர்த்துக்கல் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி .எஸ்.பி.என். டெலிவிசன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போர்த்துக்கல் அணி முதல் முறையும், சொந்த மண்ணில் ஆடும் பிரான்ஸ்அணி 3வது முறையும் கிண்ணம் வெல்ல உச்சகட்டமாக மோதிக் கொள்ளும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.228 கோடி வரை கிடைக்கும். இது கடந்த 2012ம் ஆண்டு நடந்த யூரோ கிண்ண தொடர் பரிசுத் தொகையை விட 50 சதவீத அதிகம் ஆகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்