உலகக் கிண்ணத்துக்கான புதிய ஜெர்ஸியை வெளியிட்ட பாகிஸ்தான்

116
PCB reveals Pakistan's Team Jersey for ICC Cricket World Cup 2023

இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் ஜெர்ஸியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இந்தியா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி 13ஆவது ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. 

இந்த நிலையில், ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருவதுடன், முக்கியமான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவுள்ளது 

இதனிடையே, ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்ஸியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (28) வெளியிட்டுள்ளது.   

ஸ்டார் நேஷன் ஜெர்ஸி 23 (Star Nation Jersey) என பெயரிடப்பட்ட இந்த ஜெர்ஸியை பாகிஸ்தாதான் கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் ஜகா அஷ்ரப் லாகூரில் வைத்து வெளியிட்டு வைத்தார்.   

‘Star Nation Jersey’என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் ரசிகர்களுக்கும் தொடர்பினை ஏற்படுத்துவதாக இது அமையுமென ஜகா அஷ்ரப் தெரிவித்தார். மேலும் வழமையான கிரிக்கெட் வரலாற்றுக்கும், எதிர்காலத்துக்குமான இணைப்பாக இந்த புதிய ஜெர்ஸி இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் 

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருவாய் பணிப்பாளர் உஸ்மான் வாஹீத் கருத்து தெரிவிக்கையில், ‘Star Nation Jersey’ வெருமனே ஜெர்ஸி கிடையாது. இது வெற்றி, தியாகம், கதைகளையும் உள்ளடக்கியது. இதில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் பாகிஸ்தான் ரசிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் குறிக்கும். ஒவ்வொரு பாகிஸ்தானியரும் பெருமைப்படும் விதமாக இந்த புதிய ஜெர்ஸி தயாரிகப்பட்டுள்ளது என கூறியுள்ளார் 

இதேவேளை, அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள உலகக் கிண்ண ஜெர்சியை அணிந்த புகைப்படத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாமுடன், உதவித் தலைவர் சதாப் கான் காணப்படுகிறார். இது தவிர, இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும் படத்தில் ஒன்றாகக் காணப்படுகின்றனர். 

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது. இரு அணிகள் மோதும் போட்டி ஒக்டோபர் 6ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல, ஒக்டோபர் 14ஆம் திகதி இந்தியாவை அஹமதாபத்தில் பாகிஸ்தான் அணி சந்திக்கவுள்ளது.   

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<