ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்காவுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்குமா?

Tokyo Olympics - 2021

252

இலங்கையின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான அடைவுமட்டத்தை நெருங்கியுள்ளார். 

இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருந்த ஆசிய கனிஷ் ஜிம்னாஸ்டிக் போட்டித் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மில்கா கிஹானிக்கு டோக்கியோ ஒலிம்பிக் வரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கான உலக தரவரிசையின் படி, மில்கா கிஹானி தற்போது ஆசிய வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இந்தியாவின் ப்ரான்தி நாயக் இரண்டாவது இடத்தில் உள்ளார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது வட கொரியா

எனவே, உலக ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் ஆசிய வலய நாடுகளின் தரவரிசையை அடிப்படையாக வைத்து ஒலிம்பிக்கில் தகுதியினை பெற்றுக்கொடுத்தால், மில்காவுக்கும், இந்திய வீராங்கனைக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்

அதுமாத்திரமின்றி, ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுகின்ற நாடுகளினால் வழங்கப்படுகின்ற விசேட புள்ளிகள் அடிப்படையிலும், ஆசிய நாடுகளுக்கான Quota இன் கீழும் மில்காவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எது எவ்வாறாயினும், இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு ஜுன் மாதம் சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனத்தினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

“2022இல் 100 இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி

இதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மில்கா கிஹானி தகுதிபெற்றமை தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் குழு இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை இலங்கை ஜிம்னாஸ்டிக் சம்மேளனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதேபோல, ஆசிய வலயத்தில் முதலிடத்தைப் பெற்று மில்காவுக்கு ஒலிம்பிக் வரம் கிடைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியானது முற்றிலும் பொய்யானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் காரணமாக ஆசிய ஜிம்னாஸ்டிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், அதனை அடிப்படையாக வைத்து ஒலிம்பிக் அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்த வீரர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள் எனவும், உலக ஜிம்னாஸ்டிக் போட்டித் தொடரின் முடிவுகளின் படி தான் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இரத்துச் செய்யப்பட்ட இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணம்

இதுஇவ்வாறிருக்க, தேசிய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதியினைப் பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை எனவும், தொழில்நுட்ப புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது

18 வயதான மில்கா கிஹானி, ஆசிய கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் போட்டித் தொடரில் 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளார்

அத்துடன், 2018இல் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட அவர், ஆசிய வலயத்துக்கான சாதனையொன்றையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும், 2014இல் நடைபெற்ற கனிஷ் பொதுநலவாய விளையாட்டு விழாவில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் தேசிய ஜிம்னாஸ்டிக் சம்பியனாகவும் தெரிவாகினார்

வரலாற்றில் முதல்முறை 60 வீர, வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம்

அதேபோல, 2018இல் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் 8ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

பிலியதன்தல சோமவீர சந்திரசிறி கல்லூரி, பிலியன்தல மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்ற அவர், 2011 முதல் 2014 வரை தொடர்ச்சியாக தேசிய கனிஷ் ஜிம்னாஸ்டிக் சம்பியனாகத் தெரிவாகியிருந்தார்

அதுமாத்திரமின்றி, தனது 8ஆவது வயதில் கனிஷ் ஜிம்னாஸ்டிக் சம்பியனாக மில்கா கிஹானி தெரிவாகியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புலமைப்பரிசிலின் கீழ் மில்கா கிஹானி தற்போது ஜப்பானில் பயிற்சிகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

எனவே, மில்கா கிஹானி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றால் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுக்கொள்வார்

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க …