உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

ICC ODI World Cup 2023

299

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாம், அந்நாட்டு கிரிக்கெட் சபை (PCB) மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>தென்னாபிரிக்காவுக்கு உலகக் கிண்ணத்தில் பெரும் இழப்பு

நட்சத்திர துடுப்பாட்டவீரர் பாபர் அசாம் தலைவர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் ஆசியக் கிண்ணத்தின் போது உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளரான நஸீம் சாஹ்விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் ஆசியக் கிண்ணத்தில் உபாதைச் சிக்கல்களை சந்தித்த ஏனைய வேகப்பந்துவீச்சாளரான ஹரிஸ் ரவுபிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் நஸீம் சாஹ்வின் உபாதை பிரதியீட்டு வீரராக ஹஸன் அலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஹஸன் அலி தவிர அணியில் காணப்படும் ஏனைய வேகப்பந்துவீச்சாளராக சஹீன் அப்ரிடியும், உஸாமா மிர் மேலதிக மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளராகவும் காணப்படுகின்றார்.

இந்த மாற்றங்கள் தவிர ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுத்த பெரும்பாலான வீரர்களுக்கு உலகக் கிண்ணத் தொடரிலும் பாகிஸ்தான் வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது.

இவர்கள் ஒரு பக்கமிருக்க விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மொஹமட் ஹரிஸ், சுழல்பந்துவீச்சாளர் அப்றார் அஹ்மட் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஷமான் கான் ஆகியோர் மேலதிக வீரர்களாக பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பயணமாகின்றனர்.

>> உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதோடு, இந்தியாவை ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி சந்திக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் உலகக் கிண்ணத் தொடருக்காக இவ்வார இறுதியில் இந்தியா பயணமாகும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து (செப்டம்பர் 29), அவுஸ்திரேலியா (ஒக்டோபர் 03) ஆகிய நாடுகளுடன் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாம்

பாபர் அசாம் (தலைவர்), இமாம்-உல்-ஹக், சதாப் கான் (பிரதி தலைவர்), அப்துல்லா சபீக், பகார் சமான், ஹரிஸ் ரவுப், ஹஸன் அலி, இப்திக்கார் அஹ்மட், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வஸீம் JR, அகா சல்மான், செளத் சகீல், சஹீன் அப்ரிடி, உஸாமா மிர்

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<