கட்டார் உலகக் கிண்ண திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து லீக் எதிர்ப்பு

453

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பிஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது. அதன்பின் 2022இல் மத்திய கிழக்கு நாடான கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இதற்காக கட்டார் மும்முரமாக தயாராகிக் கொண்டிருப்பதுடன், 8 பிரமாண்ட மைதானங்களையும் நிர்மானித்து வருகின்றது.  

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்..

இந்நிலையில், கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் 32 அணிகளை 48 அணிகளாக உயர்த்துவதற்கு உலக கால்பந்தாட்டத்தை ஆளும் அமைப்பான பிஃபா கடந்த சில தினங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, 16 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டால் 16 போட்டிகள் அதிகமாகவும், நான்கு நாட்கள் கூடுதலாகவும் விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன், கட்டாரில் கடும் வெயில் இருக்கும் என்பதால் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஏற்கனவே ஐரோப்பிய பருவகால தொடர்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டாலும், பிஃபாவின் தலையீட்டினால் குறித்த கால்பந்து அமைப்புகளுக்கு சலுகைகளை வழங்கி அதற்கு சுமுகமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டது.  

இந்நிலையில், 2022 உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் மேலதிகமாக சேர்க்கப்படும் பட்சத்தில் போட்டிகள் இன்னும் நான்கு நாட்கள் நீடிக்கப்படும். இதனால் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பருவகால லீக் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் லீக் ஆட்டங்கள் பாதிநிலையை எட்டியிருக்கும் நிலையில், உலகக் கிண்ணத்தினால் லீக் தொடர்களை தள்ளிப் போட முடியாது என ஐரோப்பிய கால்பந்து அமைப்பு திட்டவட்டமாக பிஃபாவிற்கு அறிவித்துள்ளது. இதனால் கட்டார் உலகக் கிண்ணத்தில் 48 அணிகள் பங்கேற்குமா என்பது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய..

ஐரோப்பிய கால்பந்து லீக்கின் தலைவர் லார்ஸ்கிரிஸ்டர் ஓல்ஸன், செவ்வாயன்று ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், கடந்த வாரம் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் வருடாந்த கூட்டத் தொடரில் 48 அணிகள் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கான முன்மொழிவுக்கு ஜியானி இன்பான்டினோ அனுமதி வழங்கியுள்ளார். உலகின் ஏனைய கால்பந்து அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இந்த முன்மொழிவுக்கு அனுமதி அளித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதுடன், வீரர்களுக்கும் அளுத்தம் கொடுக்கும்.

எனவே பிஃபாவின் இந்த தீர்மானத்தை உலகின் அனைத்து கழகங்களுக்கும், கால்பந்து அமைப்புகளுக்கும் உடனடியாக அனுப்பிவைத்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிஃபா இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், எதிர்வரும் ஜுன் மாதம் மொஸ்கோவில் நடைபெறவுள்ள பிஃபாவின் வருடாந்த கூட்டத் தொடரின் போது இது தொடர்பில் விவாதிக்கப்படும் என கால்பந்து வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேநேரம், பிஃபாவின் இந்த தீர்மானத்திற்கு 2022 உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் கட்டார் கால்பந்து சம்மேளனமும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. முன்னதாக 32 அணிகள் பங்கேற்கும் வகையில் 8 மைதானங்களை கட்டார் நிர்மானித்து வருகின்றது. தற்போது மேலும் 16 அணிகள் இணைந்து கொள்ளவுள்ளதால் மைதான பற்றாக்குறை அங்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான புதிய மைதானங்களை அமைப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் கட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஜியானி இன்பான்டினோ, கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவானார். உலகக் கிண்ணத்தை 48 அணிகளுக்கு விரிவாக்குவது இன்பான்டினோவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. இதற்காக மும்முரமாக செயற்பட்டுவரும் அவர், கடந்த சில தினங்களுக்கு முன் தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கேற்று 2022 உலகக் கிண்ணத்தில் 48 அணிகள் பங்குபற்றுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், தற்போது இன்பான்டினோவின் திட்டப்படி, போட்டி நடைபெறும் நாட்டில் இடம்பெறும் ஆரம்பகட்ட விலகல் முறையிலான சுற்றில் 32 அணிகள் பங்கெடுப்பதுடன், அவற்றில் வெற்றி பெறும் அணிகள், தரவரிசையில் முதல் 16 இடங்களில் இருக்கும் அணிகளுடன் குழு நிலைப் போட்டிகளுக்கு இணைந்து கொள்ளும்.  

மொத்தமாக 211 நாடுகள் அங்கம் வகிக்கின்ற பிஃபா அமைப்பில் இதுவரை காலமும் நடாத்தப்பட்ட உலகக் கிண்ண போட்டிகளில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தன. பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதற்குள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். அதில் இருந்து 32 நாடுகள் பங்கேற்கும். இதில் போட்டியை நடத்தும் நாடு தகுதிச் சுற்றில் பங்கேற்காமல் நேரடியாக தகுதிபெறும். எனினும், 1930ஆம் ஆண்டு 13 நாடுகளும், 1982இல் 24 நாடுகளும், 1998 முதல் 32 நாடுகளும் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

லா லிகாவில் தோல்வியுறாத அணியாக பார்சிலோனா சாதனை

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப்..

32 அணிகள் என்பதால் பெரும்பாலான முன்னணி அணிகளுக்கு இடம்கிடைக்காமல் இருந்தது. இதனால் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், குறித்த தீர்மானத்தை பிஃபா கடந்த வருடம் ஏகமானதாக அங்கீகரித்தது.  

இதற்கமைய குறித்த 48 அணிகளும் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருந்தாலும், மெக்ஸிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இப்போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் களமிறங்கவுள்ளதால் அதுதொடர்பில் இன்னும் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், 2026 உலகக் கிண்ணப் போட்டிகளில் 48 அணிகளின் பங்குபற்றல் உறுதி செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<