PSG நட்சத்திரம் நெய்மார் மற்றும் இரு வீரர்களுக்கு கொவிட்-19

223

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அவருடன் அந்த அணியின் மேலும் இரு வீரர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தமது அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பிரான்ஸின் PSG அணி குறிப்பிட்டபோதும் அவர்களின் விபரத்தை வெளியிடவில்லை.  

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ணம் கொழும்பு அணி வசம்

இதில் நெய்மருடன் ஏஞ்ஜல் டி மரியா மற்றும் லியான்ட்ரோ பரேடஸுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக பிரான்ஸின் விளையாட்டு நாளிதழான ‘லேகியுபே’ தெரிவித்துள்ளது.  

லீக் 1 தொடருக்காக அடுத்த வாரம் தயாராக இருக்கும் நிலையிலேயே பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி இந்த நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. ‘அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்’ என்று அந்தக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை இரு வீரர்களுக்கு கொரோனா அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டதாக கடந்த மாதம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பயேர்ன் முனிச் அணியிடம் தோற்ற பிரான்ஸ் சம்பியனான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம் குறிப்பிட்டிருந்தது. 

இதில் நெய்மாருக்கு மருத்துவ சோதனை முடிவு புதன்கிழமை (02) காலை கிடைத்திருப்பதோடு அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதாகவும் அவருக்கு நெருக்கமாக வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. 

Video – தமது முன்னாள் வீரராலேயே தோற்ற PSG !| FOOTBALL ULLAGAM

இதன்படி பரிஸின் மேற்குப் புறநகர் பகுதியில் உள்ள தமது வீட்டில் அவர்  14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதாகவும் வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லென்ஸ் அணிக்கு எதிரான PSG அணியின் இந்தப் பருவத்தின் முதல் போட்டி மற்றும் செப்டெர்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள மார்செய்லே அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

நெய்மரின் சக வீரரான ஆர்ஜன்டீனாவின் ஏஞ்ஜல் டி மரியா விடுமுறையை கழிக்க ஸ்பெயின் தீவான இபிசாவுக்குச் சென்ற நிலையில் சுய தனிமையில் உள்ளார். அதேபோன்று டி மரியாவுடன் விடுமுறையை கழிக்கும் லியான்ட்ரோ பரேடஸும் சுய தனிமையில் ஈடுபட்டுள்ளார்.  

லீக் 1 தொடரில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளது. கழகம் ஒன்றின் குழாத்தில் குறைந்தது நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் குறித்த போட்டி ஒத்திவைக்கப்படும். இந்த விதியினால் தொடரின் ஆரம்பப் போட்டியில் செயின்ட் எடின்னே அணியை எதிர்த்தாடவிருந்த மார்செயில்லே அணியின் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மன்செஸ்டர் யுனைடட்டின் போல் பொக்பாவிடம் நோய்த் தொற்று உறுதியான நிலையில் பிரான்ஸ் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி சுவீடன் மற்றும் செப்டெம்பர் 8 ஆம் திகதி குரோசியா அணிகளை எதிர்கொள்ளும் பிரான்ஸ் அணியில் பொக்பாவுக்கு பதில் எடுவார்டோ கமவிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<