வன்டேஜ் FFSL தலைவர் கிண்ணம் கொழும்பு அணி வசம்

800

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகத்தை 4 – 0 என வெற்றி கொண்ட கொழும்பு கால்பந்து கழக அணி, தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.

கடந்த வரம் இடம்பெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழக அணி பெனால்டியில் 3 – 2 என ரெட் ஸ்டார் கால்பந்து கழக அணியை வெற்றி கொண்டிருந்த அதேவேளை, புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகம் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை 4 – 3 என வெற்றி கொண்ட நிலையில், சுகததாஸ அரங்கில் புதன்கிழமை (2) இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் மோதின.

FFSL தலைவர் கிண்ண இறுதி மோதலில் கொழும்பு, புளூ ஈகல்ஸ் அணிகள்

தொடர் மழையினால் மைதானத்தில் இருந்த ஈரலிப்பான தன்மை இரண்டு அணி வீரர்களுக்கும் பந்தை அவதானித்து விளையாடுவதற்கு சவாலாக இருந்தது.

எனினும், முதல் 15 நிமிடங்களில் புளூ ஈகல்ஸ் வீரர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளை கொழும்பு கோல் காப்பாளர் இம்ரான் சிறப்பாக பிடித்தார்.

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி வீரர் சபீர் ரசூனியா ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்த சஸ்னி ஹெடர் செய்தார். கோலின் மேல் கம்பத்தில் பட்ட பந்து மீண்டும் தனக்கு அருகில் வர, அதனை சஸ்னி கோலாக்கினார்.

மீண்டும் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து எதிரணியின் பல வீரர்களையும் தாண்டி பந்தை எடுத்து வந்த மொஹமட் பசால், கோலுக்கு அண்மையில் இருந்து அதனை பரிமாற்ற, பந்தை நிறைவு செய்ய அங்கே கொழும்பு அணி வீரர்கள் யாரும் இருக்கவில்லை.

முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் கொழும்பு அனி வீரர்கள் எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகள் அனைத்தும் புளூ ஈகல்ஸ் வீரர்களால் தடுக்கப்பட முதல் பாதி நிறைவில் சஸ்னியின் கோலோடு கொழும்பு வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

முதல் பாதி: கொழும்பு கா.க 1 – 0 புளூ ஈகல்ஸ் வி.க  

இரண்டாம் பாதியில் பந்து அதிகமாக கொழும்பு அணி வீரர்களின் கால்களுக்கு இடையில் பரிமாறின.

Video – தமது முன்னாள் வீரராலேயே தோற்ற PSG !| FOOTBALL ULLAGAM

68ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது வந்த பந்தை மொமாஸ் கோலுக்கு அண்மையில் இருந்து இலகுவாக கோலாக்கினார்.

மீண்டும், 82ஆவது நிமிடத்தில் கோலுக்கு அண்மையில் இருந்து கொழும்பு அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் நோக்கி உதைந்த பந்துகள் தடுக்கப்பட, இறுதியில் சஸ்னி கோலுக்கு சற்று தொலைவில் இருந்து பந்தை கம்பங்களுக்குள் உதைந்து தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

மீண்டும் 89ஆவது நிமிடத்தில் ஒரு திசையில் இருந்து உள்வந்த பந்தை சபீர் கோலாக்க, போட்டி நிறைவில் 4-0 என இலகுவாக வெற்றிபெற்ற கொழும்பு கால்பந்து கழக அணி முதலாவது வன்டேஜ் FFSL தலைவர் கிண்ணத் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது

முழு நேரம்: கொழும்பு கா.க 4 – 0 புளூ ஈகல்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள் 

கொழும்பு கா.க –  அஹமட் சஸ்னி 31’ & 82’,   மொமாஸ் யாபோ 68’, சபீர் ரசூனியா 90’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

கொழும்பு கா.க – ஷரித்த ரத்னாயக்க 2’, சர்வான் ஜோஹர் 70’

புளூ ஈகல்ஸ் வி.க – மொஹமட் சிமால் 78’, ஷானக விஜேசேன 90+3’

விருதுகள்

  • இறுதிப்போட்டியின் சிறந்த வீரர் – மொஹமட் பசால் (கொழும்பு கா.க)
  • தொடரின் பெறுமதிமிக்க வீரர் – கவிந்து இஷான் (புளூ ஈகல்ஸ் வி.க)

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<