ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையிலும், பாகிஸ்தானிலும்?

255

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறுவது தொடர்பான இழுபறி தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில், ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கான புதிய திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஏனைய ஆசிய கிரிக்கெட் அணிகள்?<<

இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளை பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ESPNCricinfo செய்தி இணையதளம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை புதிய திட்டத்தின் அடிப்படையில் ஆசியக் கிண்ணத்தின் நான்கு அல்லது ஐந்து போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற எதிர்பார்க்கப்படுவதோடு, குறித்த ஆசியக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பங்கெடுக்கும் போட்டிகள் இலங்கையில் நடாத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது இந்திய அணி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தில் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியானது இலங்கையிலேயே புதிய திட்டத்தின் அடிப்படையில் நடைபெறவிருக்கின்றது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை பாகிஸ்தான் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்ல மறுத்திருந்த நிலையிலையே ஆசியக் கிண்ணம் நடைபெறும் நாடு தொடர்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்திருந்தது. எனவே இந்த இழுபறிக்கு தீர்வாக புதிய திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>வளர்ந்துவரும் மகளிர் ஆசியக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு<<

ஆசியக் கிண்ணத்தினை நடாத்தும் புதிய அறிவிப்பானது அடுத்த வார இறுதியளவில் உறுதி செய்யப்படும் எனக் கூறப்பட்டிருப்பதோடு புதிய திட்டம் உறுதி செய்யப்படும் போது பாகிஸ்தானின் போட்டிகள் நடைபெறும் மைதானமாக லாஹூர் அரங்கு இருக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை வெளியாகியிருக்கும் சில தகவல்களின்படி புதிய திட்டத்திற்கு ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் அனைத்தும் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிப்பதோடு, இது 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் நடைபெறும் இடம் தொடர்பில் இறுதி தீர்வாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு இதில் பாகிஸ்தான், நேபாளம், இந்தியா ஆகிய அணிகள் குழு A இலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் குழு B இலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<