ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப்பில் முத்துமாலி சாதனை

151

ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப் தனிநபர் பிரிவு போட்டி வரலாற்றில் முதல் 16 இடங்களுக்குள் தகுதிபெற்ற முதலாவது இலங்கையர் என்ற சாதனையை முத்துமாலி பிரியதர்ஷனி படைத்தார்.

அத்துடன், ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் 16 இடங்களுக்குள் நுழைந்த முதலாவது தெற்காசிய வீராங்கனையாகவும் முத்துமாலி பிரியதர்ஷனி புதிய மைல்கல்லை எட்டினார்.

ஆசிய மேசைப்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யபட்டுள்ள 25ஆவது ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கட்டாரின் லுசேல் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் ஆசியாவில் உள்ள திறமையான 32 வீராங்கனைகளுக்கிடையிலான பெண்களுக்கான தனிநபர் மேசைப்பந்து போட்டி நேற்றுமுன்தினம் (04) நடைபெற்றது. இப்போட்டியில் பாரி மரியம் என்ற ஈரான் வீராங்கனையை எதிர்கொண்ட முத்துமாலி பிரியதர்ஷனி, 3க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதில் முதலாவது செட்டை 5க்கு 11 என்ற கணக்கில் முத்துமாலி இழந்தாலும், அடுத்தடுத்த மூன்று செட்களையும் முறையே 11க்கு 7, 11க்கு 9, 11க்கு 8 என்ற கணக்கில் வென்றார்.

எனினும், இறுதி 16 பேர் கொண்ட சுற்றில் ஜப்பானின் அயட்டார ஹினாவை எதிர்கொண்ட முத்துமாலி பிரியதர்ஷனி முதல் மூன்று செட்களிலும் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதில் வெற்றியீட்டிய ஜப்பான் வீராங்கனை இம்முறை போட்டித் தொடரில் கலப்பு பிரிவு இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 32 வீரர்களுக்கான சுற்றில் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் பிமந்தி பண்டார, தனுஷி ரொட்றிகோ ஆகிய இருவரும், ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட செனுர சில்வாவும் தத்தமது போட்டிகளில் தோல்வியைத் தழுவினர்.

இதேவேளை, முன்னதாக நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குழுநிலை மேசைப்பந்து போட்டியில் இலங்கை பெண்கள் அணி 12ஆவது இடத்தையும், இலங்கை ஆண்கள் அணி 18ஆவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…