பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஏனைய ஆசிய கிரிக்கெட் அணிகள்?

1023

இந்த ஆண்டுக்கான (2023) ஆசியக் கிண்ணம் எங்கு நடைபெறும் என்கிற இழுபறி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடு தொடர்பில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் ஆசியக் கிண்ணம் குறித்து புதிதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பில் ஆசியக் கிண்ணம் நடாத்துவதற்கான பாகிஸ்தானின் திட்டத்தை தொடரில் பங்கெடுக்கின்ற இந்தியாவோடு சேர்த்து இலங்கை, ஆப்கானிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடாத்த திட்டமா?

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமையினை தன்னகத்தே கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆசியக் கிண்ணத்தில் பங்கெடுக்க இந்தியா பாகிஸ்தான் வராத காரணத்தினால் சில போட்டிகளை தமது நாட்டிலும் ஏனைய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடாத்துவதற்கான யோசனையை முன்வைத்திருந்தது.

எனினும் இந்த யோசனைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலையினைக் காரணம் காட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னரே மறுப்புத் தெரிவித்திருந்தன. எனினும் இந்த விடயம் தொடர்பில் ஆப்கான் மௌனம் காத்து வந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (AFC) ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து ஆசிய கிண்ணத்தை இரு நாடுகளில் நடாத்தும் பாகிஸ்தானின் திட்டத்தை நிராகரித்திருப்பதனை எழுத்து மூலமாக ஆசிய கிரிக்கெட் பேரவையிடம் (ACC) அறிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தானின் திட்டத்திற்கு ஏனைய நாடுகள் மறுப்புத் தெரிவித்த விடயத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் வீரரும் அணித்தலைவருமான காலித் லத்திப் Cricbuzz செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளதோடு, ஏனைய நாடுகள் பாகிஸ்தானின் திட்டத்தை புறக்கணித்தமைக்கு காரணமாக நிதி மற்றும் பொருள் முகாமைத்துவம் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் Zoom செயலி வாயிலாக  கிரிக்கெட் சபைகள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டு அது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை காலித் லத்திப் ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் அல்லாத நாடு ஒன்றில் நடாத்தப்படுவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

LPL தொடருக்கான தொழிநுட்ப குழு நியமனம்

விடயங்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள Cricbuzz செய்திச் சேவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அதற்கு பதில்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் சில தகவல்கள் ஆசியக் கிண்ணத் தொடர் அந்த நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு மாற்றப்பட்டால் அது பாகிஸ்தான் ஆசியக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் நிலை ஒன்றினை தோற்றுவிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேநேரம் விடயங்கள் இவ்வாறு இருக்க ஆசியக் கிண்ணம் பாகிஸ்தானில் இருந்து வேறொரு நாட்டிற்கு மாற்றப்படும் போது அந்த தொடரினை இலங்கையில் நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்திருந்ததோடு, அதற்கு இந்தியாவும் ஆதரவாக இருக்கும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<