வில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூர் அணிக்கு வெற்றி

89
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தங்களுடைய ஒவ்வொரு வெற்றிகளும் கட்டாயம் என்ற அடிப்படையில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நேற்றைய தினம் தனது தனித்துவமான அதிரடி துடுப்பாட்டத்தின் மூலமாக ஏபி டி வில்லியர்ஸ் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

வொட்சனின் அதிரடியால் சென்னைக்கு மீண்டும் முதலிடம்

ஐ.பி.எல். தொடரில் தங்களது சொந்த மைதானத்தில் ……..

பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி, ஏபி டி வில்லியர்ஸ், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் ஊடாக 202 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. குறிப்பாக அபாரமான சிக்ஸர்களை விளாசிய வில்லியர்ஸ் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 44 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்தார்.

ஆரம்பத்தில் நிதானமான துடுப்பெடுத்தாடிய வில்லியர்ஸ் 29 பந்துகளில் 36 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். பின்னர், தனது அதிரடியை வெளிப்படுத்திய இவர், பின்னர் தான் எதிர்கொண்ட 15 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசியிருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஸ்டொய்னிஸ் இறுதி ஓவரில் 20 ஓட்டங்களை விளாசி மொத்தமாக 34 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றார்.

இவர்களுக்கு உதவியாக ஆரம்பத்தில் ஓட்டங்களை குவித்திருந்த பார்த்திவ் பட்டேல் 24 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற, பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூர் அணி நிர்ணயித்திருந்த 202 ஓட்டங்கள் என்ற ஓட்ட இலக்கு கடினமான ஓட்ட எண்ணிக்கையாக இருந்தாலும், பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தை பொருத்தவரை அதிகமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகத்தன்மையை கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய பஞ்சாப் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ஓட்டங்களை கடந்திருந்த போதும், கே.எல்.ராஹுலின் ஆட்டமிழப்பின் பின்னர் அணி துடுப்பாட்டத்தில் சறுக்கலை எதிர்கொண்டது. நிக்கோலஸ் பூரன் மாத்திரம் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க, டேவிட் மில்லர் 25 பந்துகளில் வெறும் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தமை பஞ்சாப் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.

மும்பை அணியுடன் இணையும் தென்னாபிரிக்க வீரர்

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ……….

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 46 ஓட்டங்களையும், கே.எல். ராஹுல் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவ்வாறு இந்த பருவாகலத்தின் 4வது வெற்றியை பதிவுசெய்த பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இனிவரும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டயாத்தில் உள்ளது. குறித்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் பெங்களூர் அணி ப்ளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைப்பதில் நெருக்கடியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 202/4 (20), வில்லியர்ஸ் 82 (44), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 46 (34), பார்த்திவ் பட்டேல் 43 (24), முருகன் அஸ்வின் 15/1

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 185/7 (20), நிக்கோலஸ் பூரன் 46 (28), கே.எல். ராஹுல் 42 (27), உமேஷ் யாதவ் 36/3

முடிவு – பெங்களூர் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<