தொடரை கைப்பற்றிய ஆஸி. அணிக்கு ஒருநாள் அணிகளின் தரவரிசை புள்ளியில் அதிகரிப்பு

389
Image Courtesy - ICC

பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த மண் என வர்ணிக்கப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து வைட் வொஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றிய அரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசையில் ஐந்து புள்ளிகள் அதிகரிப்புடன் தொடர்ந்தும் ஐந்தாமிடத்தில் நீடிக்கின்றது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னராக அதற்கான ஒரு பயிற்சிக்கான இருதரப்பு தொடர் ஒன்றில் ஆடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அழைப்பை ஏற்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியிருந்தது.

தொடர் வெற்றிகளுடன் உலகக் கிண்ணத்திற்கு வலுவடைந்து வரும் அவுஸ்திரேலியா

இரு அணிகளுக்குமிடையிலான குறித்த ஒருநாள் சர்வதேச தொடர் நேற்று (31) நிறைவுக்கு வந்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய அணியினால் 5-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்புக்கு உள்ளானது.  

உலகக்கிண்ண தொடர் நெருங்கி வருகின்ற நிலையில் பாகிஸ்தான் அணியினுடைய குறித்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் அவ்வணி மீது கடுமையான முறையில் விரக்தியடைந்துள்ள அதேவேளை, அவுஸ்திரேலிய அணியினுடய வெற்றியானது அவ்வணியை மேலும் பலப்படுத்தியுள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் வைத்தும் எதிர்பாராத விதமாக இறுதி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க, ஒவ்வொரு தொடர்கள் நிறைவிலும் அணிகள் பெறும் அடைவு மட்டங்களை கணிப்பிடும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் குறித்த தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒருநாள் அணிகளினுடைய தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி 103 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்பட்டது. பாகிஸ்தான் அணி 102 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் காணப்பட்டது.

குறித்த தொடர் நிறைவுக்குவந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி 5-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியிருந்தாலும், அவுஸ்திரேலிய அணிக்கு தரவரிசை புள்ளியில் ஐந்து புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. எனினும், தரவரிசை நிலைகளில் இரு அணிகளுக்கும் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆனால், அவுஸ்திரேலிய அணியின் வெற்றி தரவரிசையில் ஐந்தாமிடத்தை பலப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு அதிகரிக்கப்பட்ட ஐந்து தரவரிசை புள்ளிகளுடன் சேர்த்து அவ்வணி தற்போது மொத்தமாக 108 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் நீடிக்கின்றது. அவுஸ்திரேலிய அணிக்கு தவரிசையில் முன்னால் நான்காமிடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணி 112 தரவரிசை புள்ளிகளுடன் காணப்படுவதனாலேயே அவுஸ்திரேலிய அணிக்கு தரவரிசை நிலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை.

தொடரை முழுமையாக இழந்த பாகிஸ்தான் அணிக்கு ஐந்து தரவரிசை புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது. இதனால் அவ்வணி தற்போது 97 புள்ளிகளுடன் தொடர்ந்தும் ஆறாமிடத்தில் நீடிக்கின்றது. பாகிஸ்தான் அணிக்கு அடுத்ததாக தரவரிசையில் ஏழாமிடத்தில் காணப்படும் பங்களாதேஷ் அணி 90 புள்ளிகளுடன் காணப்படுவதனாலேயே பாகிஸ்தான் அணிக்கு தவரிசையில் மாற்றம் ஏற்படவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதிப்பு

பாகிஸ்தான் அணி கடந்த காலங்களில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வந்திருந்தாலும், இந்த தொடரில் அணியின் வழமையான தலைவரான சர்ப்ராஸ் அஹமட்டுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை ஓய்வு வழங்கியிருந்தது. இந்நிலையில் குறித்த தொடருக்காக அவ்வணியின் தலைவராக சகலதுறை வீரர் சுகைப் மலிக் நியமிக்கப்பட்டிருந்தாலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் இமாட் வஸீம் அணித்தலைவராக செயற்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் சர்வதேச அணிகளின் புதிய தரவரிசை

  1. இங்கிலாந்து – 123 புள்ளிகள்
  2. இந்தியா – 120 புள்ளிகள்
  3. நியூசிலாந்து – 112 புள்ளிகள்
  4. தென்னாபிரிக்கா – 112 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா – 108 புள்ளிகள்
  6. பாகிஸ்தான் – 97 புள்ளிகள்
  7. பங்களாதேஷ் – 90 புள்ளிகள்
  8. இலங்கை – 76 புள்ளிகள்
  9. மேற்கிந்தியதீவுகள் – 76 புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 64 புள்ளிகள்
  11. ஜிம்பாப்வே – 52 புள்ளிகள்
  12. அயர்லாந்து – 43 புள்ளிகள்
  13. ஸ்கொட்லாந்து – 33 புள்ளிகள்
  14. ஐக்கிய அரபு இராச்சியம் – 15 புள்ளிகள்
  15. நேபாளம் – 15 புள்ளிகள்
  16. நெதர்லாந்து – 8 புள்ளிகள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<