பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

130
New Zealand Cricket

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடரில், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள 13 பேர்கொண்ட டெஸ்ட் குழாத்தை நேற்றைய தினம் (21) அறிவித்துள்ளது. இந்த 13 பேர்கொண்ட குழாத்தில் அந்த அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிச்சல் சென்ட்னர் இணைக்கப்பட்டுள்ளார்.

>> நுவன் துஷார அடுத்த மாலிங்கவா?

நியூசிலாந்து அணியின் முதற்தர சுழல் பந்துவீச்சாளராக அஜாஸ் பட்டேல் உள்ள போதும், தொடர்ச்சியாக உபாதைக்கு முகங்கொடுத்து வருகின்றார். அதன்காரணமாக சகலதுறை வீரரான மிச்சல் சென்ட்னருக்கு டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மிச்சல் சென்ட்னர் நியூசிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் முக்கிய வீரராக இடம்பிடித்துவந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக இணைத்துக்கொள்ளப்படுவதில்லை. இவர், இறுதியாக கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நடைபெற்ற பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

அஜாஸ் பட்டேலின் விலகல் குறித்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட் குறிப்பிடுகையில், “அஜாஸ் பட்டேல் அணியில் இல்லாமை துரதிஷ்டவசமானது. ஆனால், சகலதுறை வீரர் என்ற அடிப்படையில் மிச்சல் சென்ட்னரை இந்த தொடருக்காக ஏற்கனவே தயார்படுத்தி வைத்துள்ளோம்” என்றார்.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருந்த நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது மனைவி குழந்தை பிரசவிக்கவிருந்த காரணத்தால் இவர், குறித்த இரண்டாவது போட்டியில் விளையாடியிருக்கவில்லை. எனவே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்த டெவோன் கொன்வேவுக்கு பதிலாக வில்லியம்சன் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி நியூசிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரர் கொலின் டி கிரெண்டோம் உபாதை காரணமாக, தொடர்ந்தும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், டார்லி மிச்சல் இவரது இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மௌண்ட் மங்கனுயில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 3ம் திகதி க்ரிஸ்ச்சேர்ச்சில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொம் ப்ளெண்டல், ட்ரெண்ட் போல்ட், கெயல் ஜெமிசன், டொம் லேத்தம், டார்லி மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் சௌதி, ரொஸ் டெய்லர், நெயில் வெங்கர், பிஜே வெட்லிங், வில் யங்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<