தொடர் வெற்றிகளுடன் உலகக் கிண்ணத்திற்கு வலுவடைந்து வரும் அவுஸ்திரேலியா

106
Image Courtesy - ICC

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நேற்று (31) டுபாயில் இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 20 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 5-0 என தொடரை கைப்பற்றியது.

இவ்வெற்றியானது அவுஸ்திரேலிய அணி 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு மண்ணில் 5-0 என ஒருநாள் தொடரொன்றை வெற்றி பெறும் முதலாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபித், ரிஸ்வானின் சதங்கள் வீண்; 6 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா த்ரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில்..

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றியீட்டி 4-0 என தொடரில் முன்னிலை பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணியும், ஆறுதல் வெற்றி ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தான் அணியும் களமிறங்கின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சத்தர்ப்பத்தை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியிருந்தது. ஆஸி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி சிறந்த ஆரம்பம் ஒன்றை அணிக்கு வழங்கியிருந்தது. கடந்த போட்டியில் அரைச்சதம் பெற்ற உஸ்மான் கவாஜா இப்போட்டியில் 111 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பெற்று 2 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.  

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ஷோன் மார்ஷ் அரைச்சதம் கடக்க, இந்த தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கிளென் மெக்ஸ்வெல் மீண்டும் சிறப்பாக துடுப்பாடி 33 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து வருகைதந்த பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் உஸ்மான் சின்வாரி 4 விக்கெட்டுகளையும், ஜுனைட் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ரிஷப் பாண்டிடம் கிரிக்கெட் கற்றுக்கொண்ட ஒலிம்பிக் நாயகன்

இந்தியாவுக்கு முதற்தடவையாக…

ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அந்த அணி ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த போது ஆபித் அலி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

எனினும், இரண்டாவது விக்கெட்டுக்காக ஷான் மசூத்துடன் கைகோர்த்த ஹரிஸ் சொஹைல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்றபோது 50 ஓட்டங்களுடன் ஷான் மசூத் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மொஹமட் ரிஸ்வான் (12) நிலைக்கவில்லை.  

பின்னர் 4ஆவது விக்கெட்டுக்காக இணைந்த ஹரிஸ் சொஹைல் மற்றும் உமர் அக்மல் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். இவர்கள் இருவரும் மிகச்சிறந்த ஓட்டவேகத்துடன், பாகிஸ்தான் அணியை திடமான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும், நெதன் லயனின் பந்துவீச்சில் உமர் அக்மல் (43), ஜேசன் பெஹ்ரன்டோப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரது ஆட்டமிழப்பை தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹரிஸ் சொஹைல் தனது 2ஆவது ஒருநாள் சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

10 ஓவர்கள் எஞ்சியிருந்தபோது ரிச்சர்ட்ஸனின் பந்தில் ஹரிஸ் சொஹைல் ஆட்டமிழந்ததை அடுத்து போட்டி அவுஸ்திரேலியா பக்கம் திரும்பியது. எனினும், இமாத் வசீம் மற்றும் யாசிர் ஷா அதிவேகமாக 48 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று தொடர்ந்து அந்த இமாலய இலக்கை எட்டுவதற்கு முயன்றனர்.  

இந்த நிலையில், 48 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் யாசிர் ஷா ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணிக்கு 6 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற வேண்டி ஏற்பட்டது. எனினும், ரிச்சர்டசன் வீசிய இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு வெறும் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசீம் 50 ஓட்டங்களையும், ஹரிஸ் சொஹைல் 130 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் ஜேசன் பெஹ்ரன்டோப் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக கிளென் மெக்ஸ்வெல் தெரிவாக, தொடரின் நாயகனாக ஆரோன் பிஞ்ச் தெரிவானார்.

இதன்படி, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3-2 என வீழ்த்திய ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி, அதே உற்சாகத்துடன் பாகிஸ்தான் அணியுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியதுடன், தொடர்ச்சியாக 8 ஒருநாள் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

அத்துடன், கடந்த வருடம் 18 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 3இல் மாத்திரம் வெற்றீயிட்டிய அவுஸ்திரேலிய அணி, முன்னதாக நடைபெற்ற இந்திய அணியுடனான ஒருநாள் தொடரையும், தற்போது பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரையும் வெற்றிகொண்டு உலகக் கிண்ணத்துக்கான ஆரம்பத்தை நிரூபித்துக்காட்டியது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா அணி – 327/7 (50)உஸ்மான் கவாஜா 98, கிளென் மெக்ஸ்வெல் 70, ஷோன் மார்ஷ் 61, ஆரோன் பிஞ்ச் 53, உஸ்மான் சின்வாரி 4/49, ஜுனைட் கான் 3/73

பாகிஸ்தான் அணி – 307/7 (50) – ஹரிஸ் சொஹைல் 130, இமாத் வசீம் 50*, ஷான் மசூத் 50, உமர் அக்மல் 43, ஜேசன் பெஹ்ரன்டோப் 3/63

முடிவுஅவுஸ்திரேலிய அணி 20 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<