பாகிஸ்தான் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

1726

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைனுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது பந்துவீச்சுப் பாணி சட்டவிரோதமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு போட்டித் தடை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (04) அறிவித்துள்ளது.

கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடும் போது ஹஸ்னைன் சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு நடவடிக்கைக்காக முதலில் புகார் அளிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் பாகிஸ்தான் சுபர் லீக்கில் பங்கேற்க நாடு திரும்ப இருந்ததால், அவுஸ்திரேலியாவில் அல்லாமல் லாகூரில் உள்ள மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் பந்தை வீசி எறிவதாக தெரியவந்தது. எனவே, அவரது பந்துவீச்சு சட்டவிரோதமானது என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் போட்டித்தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஹஸ்னைன் பந்து வீசும் போது 15 பாகைக்கு மேலாக கையை வளைப்பதாக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தத் தடையை அடுத்து தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுபர் லீகில் அவருக்கு விளையாடி முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர் விளையாடுகின்ற குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்கு பாரிய பின்னடைவையும் கொடுத்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை,தனது சொந்த பந்துவீச்சு நிபுணர்களுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஹஸ்னைனின் பந்துவீச்சு பாணியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில், நாம் தற்போது ஒரு பந்துவீச்சு ஆலோசகரை நியமிக்கவுள்ளோம். அவர் மொஹமட் ஹஸ்னைனுடன் பணியாற்றுவார். இதனால் அவர் தனது பந்துவீச்சை சரிசெய்து மீள்பரிசோதனைக்காக தயாராக முடியும்.

ஹஸ்னைன் பாகிஸ்தானுக்கு ஒரு சொத்து. 145 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசுகின்ற விரல் விட்டு எண்ணுகின்ற சில பந்து வீச்சாளர்களில் ஒருவர். எனவே, அவரது எதிர்காலம் மற்றும் பாகிஸ்தானின் நலன்களை முன்னணியில் வைத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில் தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுபர் லீக்கில் அவர் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார் என்று முடிவு செய்துள்ளது.

மாறாக, இந்த நேரத்தை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட பந்துவீச்சு ஆலோசகருடன் இணைந்து தனது பந்துவீச்சு நடவடிக்கையை மாற்றியமைக்கப் பயன்படுத்துவார், இதனால் அவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பந்து வீச்சை முடிந்தவரை விரைவாகத் திருத்திக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு முயற்சி செய்யலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

21 வயதான மொஹமட் ஹஸ்னைன் பாகிஸ்தானுக்காக 8 ஒருநாள் மற்றும் 18 T20i போட்டிகளில் விளையாடி மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற T20i போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்தார். இதன்மூலம் T20i போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையயும் அவர் பெற்றுக்கொண்டார்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<