இளையோர் உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை வெளியேற்றம்

167

19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (02) தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட இலங்கை 119 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்துள்ளது.

>>பங்களாதேஷை வீழ்த்தி சம்பியனானது இலங்கை மகளிர் அணி

மேலும் இந்த தோல்வியுடன் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான  உலகக் கிண்ணத் தொடரில் இருந்தும் இலங்கை வெளியேறுகின்றது.

19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான  உலகக் கிண்ணத் தொடரில் சுபர் சிக்ஸ் மோதலாக இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது.

இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்த காரணத்தினால் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற கட்டாய வெற்றியை எதிர்பார்த்த நிலையில் இலங்கை இளம் வீரர்கள் காணப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளம் அணியினர் முதலில் தென்னாபிரிக்காவை துடுப்பாடப் பணித்தனர்.

இதன்படி போட்டியில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்கள் எடுத்தது.

தென்னாபிரிக்க இளம் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹுவான் டி ப்ரெய்டொரியஸ் 71 ஓட்டங்களையும், ரைலி நோர்டன் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை பந்துவீச்சில் விஷ்வ லஹிரு, மல்ஷ தருபதி மற்றும் சுபுன் வடுகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

>>மகளிர் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள சமரி அத்தபத்து

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது தென்னாபிரிக்க இளம் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 23.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

இலங்கை துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சாருஜன் சண்முகநாதன் 29 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் தென்னாபிரிக்க பந்துவீச்சில் குவெனா  மாபாக்கா 6 விக்கெட்டுக்கையும், ரைலி நோர்டன் 4 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக குவெனா மாபாக்கா தெரிவாகினார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<