குர்னாலுக்கு கொவிட்-19; 2வது T20I போட்டி ஒத்திவைப்பு

India tour of Sri Lanka 2021

133
Krunal Pandya
 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியா கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதனால், இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த இரண்டாவது T20I போட்டி, நாளைய தினம் (28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (27) ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தொற்றுக்கான PCR பரிசோதனையில், வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதியாகும் பட்சத்தில் நாளைய தினம் (28) போட்டி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி இன்றைய தினம் நடக்கவிருந்தது. எனினும், குர்னால் பாண்டியாவுக்கு ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று காரணமாக போட்டி தற்போதைய நிலையில், நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள குர்னால் பாண்டியா, இலங்கை அரசின் வைத்திய ஆலோசனையின்படி, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குர்னால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்புக்கொண்ட 8 பேர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் பிளவர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்தமையால், தொடர் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய போட்டி அட்டவணை

  • 2வது T20I போட்டி – ஜூலை 28
  • 3வது T20I போட்டி – ஜூலை 29

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<