சூடு பிடித்துள்ள மொயின் அலியின் ஒசாமா விவகாரம்

2033

அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு இனவெறியுடன் அவமதித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான மொயின் அலி.

மொயின் அலி எழுதியுள்ள தனது சுயசரிதை புத்தகம் ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 31 வயதான மொயின் அலி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இங்கிலாந்தில் தான் என்றாலும், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர். இங்கிலாந்து அணிக்காக 2014ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் அவர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:–

மன வலிமையால் வெற்றிகண்ட தமிம் இக்பால்

ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட..

2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கார்டிப்பில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற்றோம். அது தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எனது முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியாகும். இதில் எனது தனிப்பட்ட செயல்பாடு (மொத்தம் 55 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட் எடுத்தார்) மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.

ஒசாமா என்று அழைத்தார்

இந்த போட்டியில் நான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர், என் பக்கமாக திரும்பி, இந்த ஓசாமாவை சீக்கிரம் எடுக்க வேண்டும் (அவுட் ஆக்க வேண்டும்) என பேசினர். இதைக்கேட்ட நான் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றேன். என்னால் நான் கேட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு கோபத்தில் கன்னம் சிவந்தது. இதற்கு முன்பு கிரிக்கெட் களத்தில் இது மாதிரி கோபமடைந்ததில்லை.

அவுஸ்திரேலிய வீரர் என்னை மோசமாக வசைபாடியதை சக வீரர்கள் சிலரிடமும், எங்களது பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிசிடமும் சொன்னேன். அவர் அதை அப்போதைய அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமனின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பயிற்சியாளர் லீமன், சம்பந்தப்பட்ட அந்த அவுஸ்திரேலிய வீரரிடம்மொயின் அலியை ஒசாமா என்று அழைத்தீர்களா?’ என்று கேட்டதற்கு அந்த வீரர் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார். ‘அதை எடுத்துக் கொள்பகுதி நேர பந்துவீச்சாளர் (Part Timer)’ என்று தான் சொன்னேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு ஒசாமா என்ற வார்த்தைக்கும், ‘பார்ட் டைமர்என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன? இருந்தாலும் அந்த வீரரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும், அந்த ஆட்டம் முழுவதும் நான் கோபத்திலேயே இருந்தேன்.

மன்ரோவின் அதிரடியுடன் CPL கிண்ணத்தை வென்றது ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக்கின் (CPL)..

இந்த ஆஷஸ் தொடரை நாங்கள் 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தொடர் நிறைவடைந்ததும் அந்த அவுஸ்திரேலிய வீரரிடம் மீண்டும் இது பற்றி கேள்வி எழுப்பிய போது அதே போன்றே பதில் அளித்தார். இவ்வாறு மொயின் அலி சுயசரிதை புத்தக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மூர்க்கத்தனமாக செயல்படும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில்நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது அவுஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள்.  

2015 கார்டிப்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இதேபோல, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைகளுக்கு ஆளாகியுள்ள ஸ்மித், வோர்னர் மற்றும் பேன்ட்கிராப்ட் ஆகிய மூவர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தப்பட கடினமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வருடம் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பார்வையாளர் அரங்கில் இருந்த ஒருவர், எப்போது உங்களுடைய ஹிஜாப் கடை திறக்கப்படும் என கோஷமிட்டார். எனினும் போட்டி நடைபெற்ற மைதானத்தில் குளிரான காலநிலை நிலவியதால் அவர் தனது காதை அடைத்துக் கொண்டிருந்ததாகவும், இதனால் எதையும் அவரால் கேட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் அவுஸ்திரேலிய விசாரணை

மொயின் அலியின் குற்றச்சாட்டை விசாரிக்க தொடங்கியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அது தொடர்பான விபரங்களை உடனடியாக தரும்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை விருத்தி…

இதுதொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இது போன்ற எல்லை மீறிய விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதற்கு எங்களது விளையாட்டு சமூகத்தில் இடமில்லை. தேசத்திற்காக விளையாடும் போது, எங்களுக்கு என்று மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். எனவே இந்த விவகாரத்தை நாங்கள் ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.’ என்றார்.

ஏற்கனவே அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், கெமரூன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டத்தில் தடையை அனுபவித்து வரும் நிலையில், மேலும் ஒரு அவுஸ்திரேலிய வீரர் சர்ச்சையில் சிக்கி இருப்பது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியர்கள் இனவெறியர்களா?

அவுஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த இன வெறியர்கள் என்பது உலகம் அறிந்த விடயம். வெள்ளை இனத்தவர்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பது அவர்களது தாழ்மையான எண்ணம். ஏனைய யாரையும் அவர்கள் திறமையானவர்களாக அங்கீகரிப்பதில்லை.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் முன்னிலை அணியாக விளங்குகின்ற அவுஸ்திரேலியாவில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு விளையாடும் போது இனவெறியான செயற்பாடுகளில் அந்நாட்டு ரசிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒரு விடயமாகவும் மாறிவிட்டது. இதற்கு முன்பு இந்திய, இலங்கை வீரர்கள் மற்றும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும் இதுபோன்ற இனவெறி இழிவுபடுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

முன்பு இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களே இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

அதேபோல, கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதன்போது இங்கிலாந்து அணிக்கும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும் இடையில் சிட்டினியில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சீக்கியரான மொண்டி பனீசரும், தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த வெள்ளையரான கெவின் பீட்டர்சனும் விளையாடியிருந்தனர். எனினும் இப்போட்டியின்போது பனீசரையும், பீட்டர்சனையும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் துவேஷமாக விமர்சித்து தங்களது இன வெறியை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை வரலாறுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில், உலக கிரிக்கெட்டின் பிக் 3 நாடுகளில் ஒன்றாக விளங்குகின்ற அவுஸ்திரேலிய அணியிலும், நிற பேதம் மற்றும் இன பாகுபாடுகளைக் கொண்டு வீரர்களை அணிக்குத் தெரிவு செய்கின்ற நடைமுறை அரிதாக இருந்தாலும், அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளில் விளையாடி வருகின்ற பாகிஸ்தான் வம்சாவளி வீரரான உஸ்மான் கவாஜா நிற பேதம் மற்றும் இனவெறி விமர்சனங்கள் காரணமாக தான் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக கடந்த வருடம் முதற்தடவையாக தெரிவித்திருந்தமை விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தண்டனை விதிக்கப்படுமா?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி இனவெறி கருத்துக்களை தெரிவித்தாலோ அல்லது பேசினாலோ, வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அந்த நாட்டின் மீது ஆயுட்கால தடை விதிக்க முடியும். ஆனால், அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை அவுஸ்திரேலியா மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> தலைவர் பதவியிலிருந்து விலகியதன் பின்னணி என்ன?: மனந்திறந்த டோனி

மாறாக, இனவெறி மற்றும் கறுப்பின வீரர்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற பாகுபாடு காரணமாக ஒரு காலத்தில் தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை ரத்து செய்தமை அனைவரும் அறிந்த விடயம்.

எனவே, விளையாட்டில் நிற பேதம் மற்றும் இன பாகுபாட்டுக்கு முன்னுரிமை அளித்தால் ஒருபோதும் அந்த நாடு விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடையாது என்பது நிதர்சனமான உண்மையாகும். அதேபோல, இன்று கால்பந்து, கிரிக்கெட், மெய்வல்லுனர் உள்ளிட்ட முக்கியமான விளையாட்டுக்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த அல்லது வம்சாவளி வீரர்கள் அதிகளவில் விளையாடி வருகின்றனர். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதையும் எம்மால் அவதானிக்கலாம். ஆனால் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய ஆயுதமாக விளையாட்டு விளங்குகின்றமையினால், மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியிலும் அனைத்து வீரர்களுடனும் இன, மத, மொழி பாகுபாடின்றி வீரர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<