இந்திய பாரா மெய்வல்லுனரில் இலங்கைக்கு 11 பதக்கங்கள்

120

இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது இந்திய பகிரங்க தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை அணி ஒரு தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 11 பதக்கங்களை வென்று அசத்தியது.

இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்தினால் 4 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்தின் விசேட அழைப்பிற்கு அமைய இந்தப் போட்டியில் இலங்கையிலிருந்து 9 வீர, வீராங்கனைகள் பங்குகொண்டனர்.

இதில் பெண்களுக்கான T47 நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட ஜனனி தனங்ஜனி, 5.01 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான T46 நீளம் பாய்தலில் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீராங்கனையான குமுது பிரியங்கா 4.71 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்.

இதனிடையே, அதே பிரிவிற்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 13.47 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான F57 குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட திசரா ஜயசிங்க 5.90 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட சமித்த துலான், 65.27 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த சமித்த துலான், கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் 66.60 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை தூரத்தைக் கடந்து அசத்தியிருந்தார்.

ஆண்களுக்கான T42 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அனில் பிரசன்ன (12.95 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியை அவர் 12.95 செக்கன்களில் நிறைவு செய்தார். அதே பிரிவில் போட்டியிட்ட புத்திக இந்திரபால 13.43 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அதேபோன்று, ஆண்களுக்கான T44 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நுவன் புத்திக 11.77 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் அதே பிரிவிற்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 6.41 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

அத்துடன், ஆண்களுக்கான T47 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சமன் மதுரங்க, போட்டியை 50.55 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

 >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<