இலங்கையுடனான இரண்டாவது T20 யில் இருந்து விலகும் ஸ்டார்க்

82

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20i தொடரின் இரண்டாவது போட்டியில் இருந்து, அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் தனது சகோதரரின் திருமணத்தின் காரணமாக விலகியிருக்கின்றார். 

இதனால் காப்பா நகரில் எதிர்வரும் புதன்கிழமை (30) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின்  இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்போட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வோர்னர், மெக்ஸ்வெல் அசத்த இலங்கையை இலகுவாக வீழ்த்திய ஆஸி.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ……

மிச்செல் ஸ்டார்க் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியினை அவுஸ்திரேலியா 134 ஓட்டங்களால் வீழ்த்த 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவியிருந்தார். இதேவேளை, குறித்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையும் பெற்று காணப்படுகின்றது. 

இந்நிலையில் ஸ்டார்க்கிற்கு பிரதியீடாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி உள்வாங்கும் என எதிர்பார்க்கப்படும் வேகப் பந்துவீச்சாளர்களான சீன் அப்போட் மற்றும் பில்லி ஸ்டேன்லேக் ஆகிய இருவரும் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான மார்ஷ் ஒருநாள் கிண்ணத்தில் அண்மையில் மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இவர்களில் சீன் அப்போட் சிறந்த பந்துவீச்சு சராசரியினை கொண்டிருக்கின்றார். 

அதேநேரம், இந்த வீரர்களில் பில்லி ஸ்டேன்லேக் ஆஸி. அணிக்காக 17 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் அனுபவத்தை கொண்டிருப்பதோடு, சீன் அப்போட் ஒரு T20 போட்டியில் மாத்திரமே விளையாடிருப்பது குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<