இன்றைய நாளில் பிரிவு A (டிவிஷன் A) வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

மாஸ் யுனிச்செல்லா எதிர் கான்ரிச் பினான்ஸ்

மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் நிறைவடைந்திருக்கும் இப்போட்டியில் மாஸ் யுனிச்செல்லா அணி கான்ரிச் பினான்ஸ் அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கான்ரிச் பினான்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதனடிப்படையில் களமிறங்கிய கான்ரிச் பினான்ஸ் அணியினர் வெறும் 20 வயேதயான துவிந்து திலகரட்னவின் சுழலினை எதிர்கொள்ள தடுமாறி 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

கான்ரிச் அணியின் துடுப்பாட்டத்தில் பத்தும் நிஸ்சங்க அதிகபட்சமாக 27 ஓட்டங்களை குவிந்திருந்தார், அபார பந்து வீச்சை வெளிக்காட்டிய துவிந்து திலகரட்ன வெறும் 30 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வெற்றி இலக்கை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய, திலகரட்ன  தில்ஷான் தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா அணி ரமித் ரம்புக்வெலவின் அதிரடியுடன் 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் அதிரடி காட்டிய ரமித் ரம்புக்வெல ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் TM சம்பத் 45 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் – 126 (38.2)பத்தும் நிஸ்சங்க 27, துவிந்து திலகரட்ன 6/30, தில்ருவான் பெரேரா 2/11

மாஸ் யுனிச்செல்லா – 129/2 (17) ரமித் ரம்புக்வெல 68*, TM சம்பத் 45

 எல்.பி பினான்ஸ் A எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் A

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் A அணி 4 விக்கெட்டுகளால் எல்.பி பினான்ஸ் A அணியை தோற்கடித்தது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ்  ஹோல்டிங்ஸ் அணி முதலில் எல்.பி பினான்ஸ் அணியை துடுப்பாட பணித்திருந்தது.

இதன்படி களமிறங்கிய எல்.பி பினான்ஸ் அணியினர் எதிரணியின் பந்து வீச்சை சமாளிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொண்டனர். இதனால் 37.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த எல்.பி பினான்ஸ் A 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியார்களுக்கு மஹேலவின் விசேட அறிவுரை

நாம் அனைவரும் தலைவர்களாக பிறப்பதில்லை. உலகிலுள்ள அனைவரும் தலைவர்கள்தான்..

எல்.பி பினான்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் தனியொரு வீரராக போராடியிருந்த இசுரு உதான 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியின் பந்து வீச்சில் விக்கும் பண்டார 4 விக்கெட்டுகளையும், பானுக்க ராஜபக்ஷ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இலகு வெற்றி இலக்கைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி  இலங்கை டெஸ்ட் அணியின் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்ட அரைச் சதத்துடன், 33.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற கருணாரத்ன 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

எல்.பி பினான்ஸ் A – 159 (37.1)இசுரு உதான 43, விக்கும் பண்டார 4/25, பானுக்க ராஜபக்ஷ 3/31

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் A – 162/6 (33.2) திமுத் கருணாரத்ன 77*, இசுரு உதான 1/13

கொமர்ஷல் கிரடிட் A எதிர் சம்பத் வங்கி

MCA மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் 61 ஓட்டங்களால் கொமர்ஷல் கிரடிட் A அணி சம்பத் வங்கியை வெற்றிகொண்டது.

மழை காரணமாக 36 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சம்பத் வங்கி கொமர்ஷல் கிரடிட் அணிக்கு முதலில் துடுப்பாட்டத்தை வழங்கியது.

இதன்படி களமிறங்கிய கொமர்ஷல் கிரடிட் வீரர்களில் தில்ஷான் முனவீர சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதத்துடன் 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவரின் உதவியோடு 33.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த கொமர்ஷல் கிரடிட் A அணி 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சம்பத் வங்கியின் பந்து வீச்சில், சுழல் வீரர் தரிந்து கெளஷால் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியதோடு, இலங்கை அணிக்காக T20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கசுன் ராஜித 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து வெற்றி இலக்கை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய சம்பத் வங்கி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தனர்.

இதில் சம்பத் வங்கி சார்பாக அதிகபட்சமாக சமீன் கந்தனராச்சி 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். கொமர்ஷல் கிரடிட் அணியின் பந்து வீச்சில் அசித்த பெர்னாந்து 3 விக்கெட்டுகளையும், லஹிரு கமகே, இமேஷ் உமயங்க மற்றும் சசித் பத்திரன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடாத்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் A – 182 (33.2)தில்ஷான் முனவீர 85, வனிந்து ஹஸரங்க 27, தரிந்து கெளஷால் 3/23, பிரபாத் ஜயசூரிய 3/26, கசுன் ராஜித 2/66

சம்பத் வங்கி – 121 (29.1) சமீன் கந்தனராச்சி 25, அசித்த பெர்னாந்து 3/22, இமேஷ் உமயங்க 2/1, லஹிரு கமகே 2/16, சசித் பத்திரன 2/19