SLCயில் மாற்றத்தை ஏற்படுத்த நீதிமன்றத்தை நாடிய முரளிதரன்!

377

இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முறைமையை மறுசீறமைக்குமாறு, முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், குறித்த மனு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிக்கெட் குழு உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் மார்ச் 15ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கிந்திய சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்: SLC நம்பிக்கை

கடந்த சில நாட்களாக இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முறைமையை மீள கட்டமைக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், முத்தையா முரளிதரன் உட்பட 11 பேர் குறித்த விடயத்துக்காக நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த இந்த மனுவினை முன்னாள் வீரர்களான முத்தையா முரளிரன், சித்தர்த் வெத்தமுனி, மைக்கல் திசேரா, அனா புஞ்சிஹேவா, விஜய மலசேகர, ரீன்ஷீ விஜேதிலக்க, குசில் குணசேகர, டினால் பிலிப்ஸ், நீதிபதி சலீம் மஹ்ரூப், சாந்தகுமாரன் மற்றும் பாலித கொஹோன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேற்குறித்த பதினொருவரும், இலங்கை கிரிக்கெட் சபையின் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும் என இந்த மனுவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மனுவினை ஜனாதிபதி ஆலோசகர் சன்ஜீவ ஜயவர்தன, ஆலோசகர் மிஹான் மொஹமட் மற்றும் சுதத் பெரேரா சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் கையளித்துள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…