நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்

89
Michael Bracewell picked for England Tests

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்திற்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது.

>> பஞ்சாப் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பானுக ராஜபக்ஷ

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கெள்ளும் நியூசிலாந்து அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து டெஸ்ட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் நியூசிலாந்து குழாத்தில், முழங்கை உபாதை காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடாது போன நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இடம்பெற்றிருக்கின்றார்.

அதேநேரம் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய துடுப்பாட்டசகலதுறைவீரர் மைக்கல் பிரஸ்வெலிற்கும், நியூசிலாந்தின் டெஸ்ட் குழாத்தில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் மைக்கல் பிரஸ்வெல், கடந்த இரண்டு முதல்தரப் பருவங்களிலும் 900 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் கேம் பிளச்சர் வேகப்பந்துவீச்சாளர் பிளைர் டிக்னர் ஆகியோருக்கும் நியூசிலாந்து டெஸ்ட்

குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு வீரர்களும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு இதில் பிளச்சர், 2021/22 பருவத்திற்கான பிளன்கட்சீல்ட் முதல் தொடரில் 40 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரியினைக் வெளிக்காட்டியிருந்ததோடு, டிக்னர் 10 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மே.தீவுகளின் புதிய தலைவராக நிக்கோலஸ் பூரன் நியமனம்

அதேவேளை துடுப்பாட்டவீரர் ஹேமிஷ் ரேதர்போர்ட், வேகப்பந்துவீச்சாளர் ஜேகோப் டேபி போன்ற வீரர்களுக்கும் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அஜாஸ் படேல் அணியின் முதன்மை சுழல்பந்துவீச்சாளராகவும், அவருக்கு உறுதுணையாக ரச்சின் ரவிந்திரா காணப்படுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இதேவேளை நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டெவோன் கொன்வேய், டிம் செளத்தி, ட்ரென்ட் போல்ட் ஆகிய போன்ற வீரர்களும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

மறுமுனையில் இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 20 பேர் கொண்ட நியூசிலாந்து வீரர்கள் குழாம், டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க முன்னர் 15 பேர் கொண்ட குழாமாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் மாதம் 02ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்திலும், இரண்டாம் மூன்றாம் போட்டிகள் முறையே ஜூன் 10ஆம், 23ஆம் திகதிகளில் ட்ரென்ட் பிரிட்ஜ் மற்றும் ஹெடிங்லி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து குழாம் – கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொம் பிளன்டல், ட்ரென்ட் போல்ட், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வெய், ஜெகோப் டேபி, கெமரோன் பிளச்சர், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டொம் லேதம், டேரைல் மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா, ஹேமிஷ் ரதர்போர்ட், டிம் செளத்தி, ப்ளைர் டிக்னர், நெயில் வெக்னர், வில் யங்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<