பயிற்சிக்கு திரும்பும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

108

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 2020-2021 பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக எதிர்வரும் 22ம் திகதி, 24 வீராங்கனைகளுடன் தங்களுடைய பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்திய மகளிர் அணிக்கு எதிராக ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த தொடர் கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து மகளிர் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரை, இந்தியாவுடன் இணைத்து முத்தரப்பு தொடராக நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கான பயிற்சி முகாம் ஆறு மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், தனிநபர் பயிற்சியாக ஆரம்பித்து பின்னர், சிறிய குழுக்களுக்கான பயிற்சிகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, பயிற்சிகள் லோஹ்க்போரக், ஹெடிங்லேவ், தி ஓவல், ப்ரிஸ்டோல், ஹோவ் மற்றும் செஸ்டர் போஹ்டன் ஹோல் சிசி ஆகிய மைதானங்களில் இங்கிலாந்து ஆடவர் அணிக்கு வழங்கப்பட்ட அதே சுகாதார பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் ஜொனதன் பின்ச், “இந்த பருவகாலத்தில் கிரிக்கெட் விளையாட முடியும் என நம்புகிறோம். அதேநேரம், வீராங்கனைகள் மீண்டும் பயிற்சியை மேற்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

“முதற்தர கௌண்டி கழகங்களிடமிருந்து அவர்களுடைய மைதானங்களை பெற்றுக்கொள்வதற்கு, அதிகமான உதவி கிடைத்தது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இங்கிலாந்து மகளிர் அணி மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு இது முதற்படியாக இருக்கும் என நினைக்கிறேன்” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ள வீராங்கனைகள், ஒரு தரப்பு கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த 24 பேர்கொண்ட குழாத்தில் கொவிட்-19 காரணமாக அவுஸ்திரேலியா சென்று தங்கியிருந்து மீண்டும் வந்துள்ள எமி ஜோன்ஸ் மற்றும் லஹுரென் வின்பீல்ட் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிஸன் குறிப்பிடுகையில், “எமக்கு சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாம் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் சபைகளுடன் கலந்துரையாடி வருகின்றோம்.  அவர்களை முத்தரப்பு தொடர் ஒன்றில் இங்கு விளையாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே, இந்த செப்டம்பர் மாதத்தில் மகளிர் கிரிக்கெட்டை காணமுடியும் என நினைக்கிறோம்” என்றார்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க