மே.தீவுகளின் புதிய தலைவராக நிக்கோலஸ் பூரன் நியமனம்

172

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான புதிய தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டுவந்த கீரன் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

>>மஹேலவின் கனவு T20 அணியில் இடம்பிடிக்கும் 5 வீரர்கள் யார் தெரியுமா?<<

இவ்வாறான நிலையில், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான உப தலைவராக கடந்த வருடம் செயற்பட்டுவந்த நிக்கோலஸ் பூரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிக்கோலஸ் பூரன் உப தலைவராக செயற்பட்டமை மாத்திரமின்றி, கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கீரன் பொல்லார்ட் விளையாடாத நிலையில், அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

அதேநேரம், நிக்கோலஸ் பூரனுக்கு உதவியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக ஷேய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிக்கோலஸ் பூரன் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் முதல் தொடராக நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடர் அமையவுள்ளது. இந்த தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.

அணித்தலைமை பொறுப்பு குறித்து கருத்து வெளியிட்ட நிக்கோலஸ் பூரன், “மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமையை பெருமையாக கருதுகிறேன். முன்னாள் வீரர்களின் கால் தடத்தை பின்பற்றி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கான வரலாற்றை பாதுகாக்க முற்படுவேன்.

இது உண்மையில் ஒரு மதிப்புமிக்க பொறுப்பு. மேற்கிந்திய தீவுகள் சமூகத்தில் ஒரு முக்கிய நிலை. கிரிக்கெட் என்பது மேற்கிந்திய தீவுகள் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும். தலைவராக நியமிக்கப்பட்டமை இதுவரையிலான எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சமாகும். மேலும் எங்கள் ரசிகர்கள் மற்றும் உண்மையான ஆதரவாளர்களுக்காக களத்தில் சிறந்த விடயங்களை செய்யவும், அணியை முன்னோக்கி கொண்டு செல்லவும் விரும்புகிறேன்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<