யூரோ அடுத்த சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, குரோசியா அணிகள்

UEFA EURO 2020

93
 

யூரோ 2020 கால்பந்து தொடரில் குழு D இற்கான இறுதி லீக் போட்டிகளின் முடிவுகளின்படி இங்கிலாந்து, குரோசியா  அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.   

இந்தப் போட்டிகள் இரண்டும் இந்தக் குழுவில் இருந்த அனைத்து அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு முக்கிய போட்டியாக அமைந்தது. குறித்த போட்டிகளினது விபரம் கீழே…

இங்கிலாந்து எதிர் செக் குடியரசு  

இங்கிலாந்தின் வெம்ப்லி அரங்கில் ஆட்டம் ஆரம்பமாகிய சில நிமிடங்களில் ரஹீம் ஸ்டேர்லிங், செக் குடியரசு கோல் காப்பாளர் முன்னே வர அவருக்கு மேலால் பந்தை கோலுக்கு செலுத்தியபோது, பந்து கோலின் வலது கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது. 

அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்த ஆஸ்திரியா, டென்மார்க்

எனினும் போட்டியின் 12ஆவது நிமிடத்தில் கிரீலிஷ் எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து உயர்த்தி வழங்கிய பந்தினை ஹெடர் செய்ததன் மூலம் ரஹீம் ஸ்டேர்லிங் போட்டியின் முதல் கோலைப் பெற்றார். இதுவே இந்தப் போட்டியில் பெறப்பட்ட ஒரே கோலாக இருந்தது.  

அதன் பின்னரும் இங்கிலாந்து வீரர்கள் கோலுக்கான அதிகமான முயற்சிகளை எடுத்தாலும், எந்த முயற்சிகளும் வெற்றியளிக்காத நிலையில், இங்கிலாந்து 1-0 என வேற்றி பெற்றது. 

இதன்மூலம், இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் இங்கிலாந்து D குழுவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு தெரிவாகியது.   

முழு நேரம்: இங்கிலாந்து 1 – 0 செக் குடியரசு  

கோல் பெற்றவர்கள் 

  • இங்கிலாந்து – ரஹீம் ஸ்டேர்லிங் 12

குரோசியா எதிர் ஸ்கொட்லாந்து 

ஸ்கொட்லாந்தின் ஹம்ட்டன் பார்க் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 17ஆவது நிமிடத்தில் குரோசிய அணியினருக்கு இடையில் இடம்பெற்ற வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் விலாசிக் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

எனினும் முதல் பாதி நிறைவடைய சில நிமிடங்கள் இருக்கும்பொழுது ஸ்கொட்லாந்து வீரர் மெக்கிரேகர் தமக்கான முதல் கோலைப் போட்டு போட்டியை சமப்படுத்தினார். 

எனினும், இரண்டாம் பாதியில் மீண்டும் மிக வேகமான பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட     குரோசிய அணிக்கு அதன் தலைவர் லூகா மொட்ரிச் இரண்டாவது கோலைப் பெற, மேலும் 15 நிமிடங்களில் சிரேஷ்ட வீரர் பெரிசிக் ஹெடர் மூலம் அவ்வணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

எனவே, போட்டி முடிவில் 3-1 என வெற்றி பெற்ற குரோசியா 4 புள்ளிகளைப் பெற்று செக் குடியரசு அணியுடன் D குழுவில் சமநிலையடைந்தது. எனினும் கோல் வித்தியாசத்திலும் சமநிலையடைந்த இவ்விரு அணிகளும், தாம் பெற்ற கோல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது குரோசியா குழுவில் இரண்டாம் இடத்தையும், செக் குடியரசு குழுவில் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 

எனவே, குழுவில் முதலிடம் பெற்ற இங்கிலாந்துடன், குரோசியா அடுத்த அணியாக D குழுவில் இருந்து அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.  

முழு நேரம்: குரோசியா 3 – 1 ஸ்கொட்லாந்து

கோல் பெற்றவர்கள்   

  • குரோசியா விலாசிக் 17’, லூகா மொட்ரிச் 62’, பெரிசிக் 77’
  • ஸ்கொட்லாந்து – மெக்கிரேகர் 42’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<