பினுரவுக்கு கொரோனா; இலங்கை அணியில் இணைந்தார் குசல் மெண்டிஸ்

304

இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து அணியுடன் இணைந்து கொண்டுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள குசல் மெண்டிஸ், அந்த அணியுடனான T20 தொடர் ஆரம்பமாவதற்கு முன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள குசல் மெண்டிஸ், இலங்கை குழாத்துடன் மீண்டும் இணைந்து கொண்டார் என்ற அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (14) வெளியிட்டிருந்தது.

அதன்படி, இன்றைய தினம் குழாத்துடன் இணைந்து கொண்ட குசல் மெண்டிஸ், நாளைய தினம் (15) கென்பராவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டிக்கான வீரர்கள் தெரிவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது T20 போட்டிக்கு முன்பு (12) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் வேகப் பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நேற்று (14) சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியை அவர் தறவிட்டார்.

இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதார பாதுகாப்பு ஆலோசனையின் கீழ் அவரை 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு அவுஸ்திரேலியாவுடனான 3 ஆவது மற்றும் 4 ஆவது T20 போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 ஆவது போட்டி நாளை (15) கென்பராவில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க