டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தபோதும் இலங்கை அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவால் கொண்டதாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் மூன்று டெஸ்ட், ஐந்து சர்வதேச ஒரு நாள் மற்றும் ஒரு T-20 போட்டி கொண்ட முற்தரப்புத் தொடரில் விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் ஜூலை 26ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் அவதிப்படும் முரளி விஜய் இலங்கையுடனான டெஸ்டில் இருந்து நீக்கம்

இந்த தொடர் பற்றி விளக்குவதற்கான ஊடக சந்திப்பு கொழும்பில் வியாழக்கிழமை (20) இடம்பெற்றது. இதில் பங்கேற்ற கோலி, இலங்கை மண் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தாலும் இங்கு விளையாடுவது இலகுவானதல்ல என்று குறிப்பிட்டார்.

இலங்கை என்பது நாம் எப்போதும் வந்து விளையாடுவதற்கு விரும்பும் இடம். சுற்றுப் பயணங்களின்போது அதிகம் இளைப்பாறும் இடமாகவும் இலங்கை உள்ளது. அனைத்து வீரர்களும் இங்கு விரும்பி விளையாடுகின்றனர்.

எனினும் இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காது. அது பற்றியே நாம் கவலை அடைகிறோம் என்று கோலி குறிப்பிட்டார்.

இந்திய அணி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அந்த தொடர் வெற்றியே அணியின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்கிறார் அணித் தலைவர் கோலி.

அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு பின்னர் 2014-15 காலப்பகுதியில் நாம் தரவரிசையில் 7ஆம் இடத்தில் உள்ள டெஸ்ட் அணியாக சரிந்திருந்தோம். அப்போது இலங்கைக்கான சுற்றுப் பயணமே எமக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காலி டெஸ்டுக்கு பின்னர் நாம் 0-1 என பின்தங்கி இருந்த தருணத்திலேயே எமக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் ஓர் அணியாக ஒன்றிணைந்து எமது பலம், பலவீனங்களை தெரிந்து டெஸ்ட் போட்டியில் எமது ஆட்டத்தை வரையறுத்துக்கொண்டு தரவரிசையில் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தோம். காலி டெஸ்டுக்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் எமது பயணம் அபாரமானது என்று அவர் குறிப்பிட்டார்.

கோலி தலைமையிலான இந்திய அணி 2015இல் இலங்கை வரும்போது அந்த அணி அனுபவம் அற்ற அணியாகவே இருந்தது. ஆனால் அப்போது இலங்கை அணியில் குமார் சங்கக்கார போன்ற அனுபவ வீரர்கள் இருந்தனர். போட்டியின் முதல் ஆட்டத்தில் வென்ற இலங்கை அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் தோற்று தொடரை இழந்தது.

இந்நிலையில் இலங்கை அணி தற்போது அனுபவமற்ற வீரர்களுடனேயே இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. சந்திமால் தலைமையிலான இலங்கை அணி உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

கடைசியாக நாம் இலங்கையில் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது இரு அணிகளுக்கும் இடையிலான அனுபவம் அதிக இடைவெளி கொண்டதாக இருந்தது. சங்கக்கார விளையாடிக் கொண்டிருந்தார், அஞ்செலோ மெதிவ்ஸ் இருந்தார், ரங்கன ஹேரத் விளையாடினார்.  

ஆனால் எதிரணியை விடவும் எம்மீது நம்பிக்கை வைப்பது முக்கியம் என்று நாம் உணர்த்தினோம். அதுவே ஆடுகளத்தில் நல்ல முடிவைத் தரும்என்று கோலி கடந்த கால அனுபவத்தைப் பகிர்ந்தார்.  

புதிய திட்டங்களுடன் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளவுள்ளோம் – தினேஷ் சந்திமால்

பலவீனமான ஜிம்பாப்வேயிடம் மோசமான அனுபவத்தை பெற்ற நிலையிலேயே இலங்கை அணி உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஜிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இலங்கை அணி அதிக ஓட்டங்களை குவித்து வென்றபோதும் அந்த டெஸ்டில் ஜிம்பாப்வே இரண்டு இன்னிங்ஸ்களிலும் 300 ஓட்டங்களை கடந்ததோடு பந்து வீச்சிலும் இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.

எனினும், நடைபெறவுள்ள இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக இலங்கை டெஸ்ட் அணியின் சிரேஷ்ட வீரர் உபுல் தரங்க கூறினார்.

ஜிம்பாப்வேயுடனான போட்டியை நாம் 387 என்ற ஓட்ட இலக்கை துரத்தியே வெற்றி பெற்றோம். ஜிம்பாப்வே அணியை எடுத்துக்கொண்டால் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது. அவர்கள் ஒருநாள் தொடரை வென்று டெஸ்ட் தொடரிலும் நன்றாக ஆடினார்கள். கடும் போராட்டத்திற்கு பின்னரே எமக்கு வெற்றி பெற முடிந்தது.

387 ஓட்ட இலக்கை துரத்திப் பெற்ற வெற்றி மூலம் எமது அணி வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்திய அணி தற்போது உலகில் உள்ள முதல் நிலை அணி என்பது உண்மையே. முதல் நிலை அணியொன்றுடன் விளையாடும்போது எப்படி செயற்பட வேண்டும் என்பது எமது அணி வீரர்கள் அனைவருக்கும் தெரியும் என்று தரங்க குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் அவுஸ்திரேலிய அணி உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அந்த அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரை 0-3 என தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.