வெளிநாட்டு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்கும் முதல் இலங்கை பெண்

191
Melani Hiroshi

கட்டார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனையான மெலனி ஹிரோஷி அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவர் எதிர்வரும் இரண்டு ஆண்டு காலத்திற்கு கட்டார் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இலங்கை வீராங்கனையொருவர் வெளிநாட்டு மகளிர் கிரிக்கெட் அணி ஒன்றின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

மிலாகிரிய St. Paul’s மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான மெலனி, 2000 முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதேபோல, 2000ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அரைச் சதம் ஒன்றையும் மெலனி அடித்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக மாறுவதில் கவனம் செலுத்திய அவர், இங்கிலாந்துக்குச் சென்று நிலை 1 மற்றும் நிலை 2 ஆகிய கிரிக்கெட் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இதனையடுத்து, உள்ளூர் அரங்கில் இலங்கை கடற்படை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய அவர். அதன்பிறகு அபுதாபி கிரிக்கெட் சபையின் பயிற்சியாளர் குழுவில் இணைந்து அபுதாபி மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், வீராங்கனையாகவும் பணியாற்றினார்.

இறுதியாக அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை இராணுவ மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<