மீண்டும் FIFA சிறந்த வீரர் விருதை வென்ற லெவண்டொஸ்கி

142
Lewandoski

பிபா(FIFA) வின் 2021இற்கான சிறந்த ஆண்களுக்கான கால்பந்து வீரர் விருதுக்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் மொஹமட் சலா ஆகிய வீரர்களோடு போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக குறித்த விருதை ரொபேர்ட்  லெவண்டொஸ்கி வென்றார்.

திங்கட்கிழமை சூரிச்சில் நடந்த விழாவிலே, 2020இற்கு பிறகு 2021ஆம் ஆண்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த 2021 இல் லெவண்டொஸ்கி அனைத்து போட்டிகளையும் சேர்த்து 47 போட்டிகளில் 58 கோல்களை அடித்துள்ளார். அதில் முன்னாள் பேயர்ன் முனிச் அணியின் ஜாம்பவான் முல்லரின் சாதனையும் அவர் முறியடித்தார்.  புண்டஸ்லிகா தொடரில் அவர் ஒரு பருவகாலத்திற்காக 41 கோல்களையும், ஒரு வருடத்திற்காக 43 கோல்களையும் அடித்தார்.

>> சுபர் லீக் தொடரின் சம்பியனாக மகுடம்சூடிய புளூ ஸ்டார்

லெவண்டொஸ்கி, இந்த பருவகாலத்தில் இதுவரையில் 27 போட்டிகளில் 34 கோல்களை அடித்துள்ளார். அதற்குள் 9 சம்பின்ஸ் லீக் தொடரின் குழு நிலை போட்டி கோல்களும் அடங்கும்.

33வயதான லெவண்டொஸ்கிக்கு இந்த விருது முனிச்சில் பேயர்ன் முனிச் அணியின் நிர்வாக தலைவர் ஒலிவர் கான் மற்றும் பயிற்சியாளர் ஜூலியன் நகெல்சமண் ஆகியோருக்கு முன்னால் வழங்கப்பட்டது.

இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த லெவண்டொஸ்கி, “நன்றி, எனக்கு இந்த விருது கிடைத்ததையிட்டு மிகவும் பெருமையாக உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இவ்விருது எனது சக வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் சமர்ப்பணம்” என தெரிவித்தார்.

>> இலகு வெற்றியுடன் சுபர் லீக்கை முடித்த டிபெண்டர்ஸ், அப்கண்ட்ரி லயன்ஸ்

முல்லரின் சாதனையை முறியடித்தமை குறித்தும் லெவண்டொஸ்கியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்  “நான் அவரின் (முல்லர்) சாதனையை முறியடிப்பேன் என கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. 29 போட்டிகளால் 41 கோல்களை அடிப்பீர்களா என சில வருடங்களின் முன்னர் நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால் நான் இல்லை என கூறியிருப்பேன்.

அவர் தற்போது எம்மோடு இல்லை, அவருக்கு நான் நன்றியும் கூற வேண்டும். அவர் எமக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அவரின் சாதனையை நான் முறியடித்ததை இட்டு மிகவும் பெருமையடைகிறேன்” என்றார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<