ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணையும் வியாஸ்காந்த்

461
Viyaskanth

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயற்பட அழைக்கப்பட்டிருக்கின்றார்.

>> கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்த CSK அணி

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வியாஸ்காந்த் முதலாவது பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

அந்தவகையில் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் அசத்தி வரும் அவர், இறுதியாக நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் பருவத்தில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஆடி தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் ஐந்து பந்துவீச்சாளர்களில் ஒருவராக இடம் பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், வியாஸ்காந்த் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியில் வலைப் பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டிருக்கும் விடயமானது அவ்வணியின் முகாமைத்துவக் குழு மூலம், உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை 2023ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகள் இம்மாத இறுதியில் (மார்ச் 28) ஆரம்பமாகவுள்ள நிலையில் வியாஸ்காந்த் மிக விரைவில் இந்தியா பயணமாகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவனுமான குமார் சங்கக்கார ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் செயற்பட்டு வரும் நிலையில் வியாஸ்காந்த்திற்கு இந்தப் பருவத்திற்கான IPL தொடர் முழுவதும் சங்கக்காரவின் ஆளுகையில் பயிற்சிகளை பெறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> தலைவர் பதவியிலிருந்து விலகும் திமுத் கருணாரத்ன!

ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த ஆண்டுக்கான IPL தொடரில் தமது முதல் போட்டியில் ஏப்ரல் 02ஆம் திகதி சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை எதிர் கொள்ளவிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<