ஓய்வை திரும்ப பெறுமாறு பென் ஸ்டோக்ஸுக்கு கோரிக்கை

270

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியை வலுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வை மீளப் பெற்று மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் மெத்யூ மோட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஜுலை மாதம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் T20i போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த ஸ்டோக்ஸ், அண்மையில் நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைச்சதம் விளாசி இங்கிலாந்து அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

எனினும், 2016 T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்து சம்பியன் பட்டத்தை பறிகொடுக்க முக்கிய வீரராக ஸ்டோக்ஸ் விளங்கினார். எனினும், 6 வருடங்கள் கழித்து அதே போன்றதொரு இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து தன் மீதான பழியை நிவர்த்தி செய்தார்.

கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய பென் ஸ்டோக்ஸ், 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு முதல் உலகக் கிண்ணத்தை முத்தமிட உதவினார்.

அத்துடன், அதே ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுப்பதிலும் பென் ஸ்டோக்ஸ் பிரதான பங்காற்றினார்.

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் போன்ற மெட்ச் வின்னர் தங்கள் அணிக்கு தேவை என்பதால் அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை, பயிற்சியாளர், முன்னாள் வீரர்கள் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெத்யூ மோட், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு பென் ஸ்டோக்ஸ் மீண்டும் திரும்ப வேண்டும் என்பது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

“ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்து அவர் என்னிடம் பேசியபோது, நான் முதலில் கூறியது என்னவென்றால், அவர் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால், நீங்கள் ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று நான் அவரிடம் கூறினேன். நான் அவரை ஓய்வை மறுபரிசீலனை செய்ய கூறினேன்.

அவர் தனது சொந்த முடிவுகளை எடுப்பார். ஆங்கில கிரிக்கெட்டுக்கு சரியானத்தைச் செய்ய அவர் எப்போதும் இருப்பார். அது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவின் ஒரு பகுதியாகும். இங்கிலாந்தின் முழு அமைப்புக்கும் சிறந்ததை நாங்கள் விரும்புகிறோம்.

இது ஒரு உலகக் கிண்ண ஆண்டாக இருக்கப்போகிறது. நாங்கள் சிறிது காலத்திற்கு T20 கிரிக்கெட்டை அதிகம் விளையாட மாட்டோம். ஆனால் அது அவரைப் பொறுத்தது. எவ்வளவு அதிகமாக அவரைப் பெற முடியுமோ அவ்வளவு பெரியது. அவர் டெஸ்ட் அணியின் தலைவராக அற்புதமான சேவையை வழங்கி வருகிறார். ஆனால் அவர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வரும் போது பெரிய சக்கரமாக இருப்பார்.

அசாதாரண விடயங்களை செய்யக்கூடிய நிறைய வீரர்கள் எங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு வீரர் தான் பென் ஸ்டோக்ஸ் என்பது உங்களுக்கு தெரியும். அவர் இருந்தால் வெற்றி பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நீங்கள் விளையாட முடியுமா? நாட்டுக்காக இதை கேட்கிறேன்’ என கோரிக்கை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவார் என்று நம்புவதாக இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ரொப் கீ, ”எதுவுமே நிரந்தரமில்லை, என்ன நடக்கும் என்பதையும் யாரும் அறிய முடியாது, தற்சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அவரைப் போன்ற தரமான வீரர் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதேபோல ஒருநாள் போட்டிகளிலும் மீண்டும் வந்து தம்மால் முடிந்த வரை அவர் மகிழ்ச்சியுடன் விளையாடுவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<