NSL அரை இறுதியில் குசல், ஓஷத, கமிந்து அரைச்சதமடித்து அபாரம்

National Super League Four Day Tournament 2022

103

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் நேற்று (31) ஆரம்பமாகியது.

இதில் யாழ்ப்பாணம் அணிக்கெதிரான போட்டியில் கொழும்பு அணிக்காக குசல் மெண்டிஸும், காலி அணிக்கெதிரான போட்டியில் கண்டி அணியின் ஓஷத பெர்னாண்டோவும் அரைச்சதங்களை அடித்து பிரகாசித்திருந்தனர்.

அதேபோல, கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் யாழ்ப்பாணம் அணியின் தனன்ஞய டி சில்வா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

கொழும்பு எதிர் யாழ்ப்பாணம்

குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் யாழ்ப்பாணம் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கொழும்பு அணி வலுவான நிலையில் உள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவுக்கு வரும் போது 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களையும், மாதவ வர்ணபுர 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதனிடையே, யாழ்ப்பாணம் அணியின் பந்துவீச்சில் அணித்தவைர் தனன்ஞய டி சில்வா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 224/6 (90) – குசல் மெண்டிஸ் 83, மாதவ வர்ணபுர 42, கிரிஷான் சன்ஜுல 39, திமுத் கருணாரத்ன 39, தனன்ஞய டி சில்வா 4/43

கண்டி எதிர் காலி

ஓஷத பெர்னாண்டோ (71), கமிந்து மெண்டிஸ் (51) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் காலி அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி வலுவான நிலையில் உள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, போதிய வெளிச்சமிண்மை காரணமாக முதல் நாள் ஆட்ட நேர முடிவுக்கு வரும் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வலுச்சேர்த்தனர்.

இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிரெண்டு இடங்களையும் பிடித்துள்ள வீரர்களாக கமிந்து மற்றும் ஓஷத ஆகிய இருவரும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

அதுமாத்திரமின்றி, இந்தத் தொடரில் குறித்த 2 வீரர்களும் தத்தமது 4ஆவது அரைச்சததங்களையும் பூர்த்தி செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, காலி அணியின் பந்துவீச்சில் தனன்ஞய லக்ஷான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 192/2 (59) – ஓஷத பெர்னாண்டோ 71, கமிந்து மெண்டிஸ் 51, கசுன் விதுர 45, தனன்ஞய லக்ஷான் 2/29

இந்த இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<