பங்களாதேஷில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் குல்னா டைகர்ஸ் அணிக்காக இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு முற்பகுதியில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட T20i தொடரின் போது அவிஷ்க பெர்னாண்டோ உபாதைக்கு முகங்கொடுத்தார். இதனையடுத்து குறித்த தொடரின் கடைசி 3 போட்டிகளில் இருந்து விலகிய அவர் காலில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திரசிக்சையும் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கடந்த 9 மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் இருந்த அவிஷ்க பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் கடந்த வார இறுதியில் செபஸ்டியனைட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதல் தடவையாகக் களமிறங்கியிருந்தார். SSC கழகத்துக்காக ஆடிய அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள அவிஷ்க பெர்னாண்டோ, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கி மீண்டும் திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சில்ஹட் ஸ்ரைடகர்ஸ் அணிக்காக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வந்த 31 வயதான தனன்ஜய டி சில்வா, அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணம் மற்றும் T20 உலகக் கிண்ணத் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் 3ஆம் இலக்க வீரராகக் களமிறங்கிய அவர், 8 போட்டிகளில் ஆடி 129.19 ஓட்ட வேகத்துடன் 177 ஓட்டங்களைக் குவித்தார். இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 66 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
முன்னதாக கமிந்து மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகிய இருவரும் சில்ஹட் ஸ்ரைடகர்ஸ் அணிக்காகவும், இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஏழு அணிகள் பங்கேற்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் 9ஆவது அத்தியாயம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை டாக்கா, சட்டொக்ரம் மற்றும் சில்ஹட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<