ஓமான், T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது!

Sri Lanka tour of Oman 2021

359
 

ஓமான் அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள இரண்டு T20 பயிற்சிப்போட்டிகள் மற்றும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இரண்டு பயிற்சிப் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான ஆயத்தமாக, இலங்கை அணி அடுத்த மாதம் ஓமான் அணிக்கு எதிரான இரண்டு T20 பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளது. 

குறித்த இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையடுத்து, இலங்கை அணியானது, ஐசிசி ஏற்பாடு செய்துள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது. குறித்த போட்டிகளுக்கான போட்டி அட்டவணை இன்று (09) வெளியிடப்பட்டுள்ளது.

ICC‌ T20‌ ‌உலகக்கிண்ணத் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம்

அதன்படி, எதிர்வரும் 03ம் திகதி ஓமானுக்கு செல்லவுள்ள இலங்கை அணி, 07ம் மற்றும் 09ம் திகதிகளில் ஓமான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஐசிசி ஏற்பாடு செய்துள்ள பயிற்சிப்போட்டிகளில், 12ம் மற்றும் 14ம் திகதிகளில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, உலகக் கிண்ணத் தொடருக்கான காலநிலையுடன் கூடிய சூழலில் அதிகமான போட்டிகளில் விளையாட நாம் எதிர்பார்த்துள்ளோம். இதற்கு, ஓமானுடனான போட்டிகள் மற்றும் ஐசிசி ஏற்பாடு செய்துள்ள பயிற்சிப்போட்டிகள் சிறந்த வாய்ப்பினை கொடுக்கும்என்றார்.

இலங்கை அணியானது, ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுப் போட்டிகளில், நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. நமீபியா அணிக்கு எதிரான போட்டி ஒக்டோபர் 18ம் திகதி நடைபெறவுள்ளதுடன், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி 20ம் திகதியும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி 22ம் திகதியும் நடைபெறவுள்ளன. முதலிரண்டு போட்டிகளும் அபு தாபியில் நடைபெறவுள்ளதுடன், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…