ஐசிசியின் புதிய தலைவராக கிரெக் பார்க்லே மீண்டும் நியமனம்!

International Cricket Council

184

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) புதிய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லே மீண்டும் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் நிர்வாகக்குழு சந்திப்பு இன்று சனிக்கிழமை (12) மெல்போர்னில் நடைபெற்ற நிலையில், புதிய தலைவராக கிரெக் பார்க்லே மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ் யூனியன் கழகத்துக்காக சதமடித்த சதீர, நவோத்

கிரெக் பார்க்லேவுக்கு எதிராக ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தலைவர் தவெங்வா முகலானி ஐசிசியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருந்த போதும், அவர் இறுதி நேரத்தில் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால், ஏகமனதாக பார்க்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஐசிசியின் 17 முழு அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் உட்பட 12 உறுப்பினர்களின் ஆதரவுகளை பார்க்லே பெற்றிருந்தார். இதில் இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபைகள் தவெங்வா முகலானிக்கு ஆதரவை வழங்கியிருந்தது. எனினும், தவெங்வா முகலானி போட்டியிலிருந்து விலகியதன் காரணமாக, பார்க்லே மீண்டும் பதவிக்கு வந்தார்.

கிரெக் பார்க்லே கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், இரண்டு வருடங்களாக பணிபுரிந்துவருகின்றார். நியூசிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான இவர், நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<