சுவீடனில் வளர்ந்து இலங்கை சார்பாக ஒலிம்பிக் செல்லும் மெட்டில்டா கார்ல்சன்

Tokyo Olympics - 2020

247
mathilda kalrsson facebook

உலகின் எந்தவொரு விளையாட்டு வீரராக இருந்தாலும் அவரது ஒரே கனவு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒலிம்பிக் அல்லது உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த வீரர்களில் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது? உலகெங்கிலும் மில்லியன் கணக்கான விளையாட்டு வீரர்கள் இந்தக் கனவுடன் விழிக்கின்றார்கள். 

அந்த வகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020  டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா, எதிர்வரும் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் 11,000 வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கவுள்ளது. எனவே, இலங்கை சார்பாக அந்த அரிய வாய்ப்பை குதிரைச் சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார்

2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன்

சுசந்திகா ஜயசிங்க, தமயன்தி தர்ஷா, சுகத் திலகரட்ன, ஜுலியன் போலிங் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களை நாங்கள் அடிக்கடி கேட்டிருந்தாலும், யார் இந்த மெட்டில்டா கார்ல்சன்? இவரது பின்னணி என்ன? இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் எந்த விளையாட்டில் களமிறங்கவுள்ளார் என்பது பற்றிய பல கேள்விகள் எம் மத்தியில் உள்ளன.  

டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச் சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார். ஒலிம்பிக் குதிரைச் சவாரி போட்டியில் கலந்துகொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொப்பின் வீஏ (chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

சுவீடனின் தேசிய மட்ட குதிரைச் சவாரிப் போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக மெட்டில்டா கார்ல்சன் வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

Photos : Mathilda Karlsson qualifying for the Olympic Games Tokyo 2020

அத்துடன், உலக நாடுகளில் நடைபெற்று வருகின்ற பல்வேறு குதிரைச் சவாரி போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்ட 37 வயதான அவர், கடந்த 2019இல் மாத்திரம் மெக்ஸிகோ சிட்டி, மியாமி, பரிஸ், ரோம், மொனாக்கோ, லண்டன், டோஹா மற்றும் ப்ரேக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற குதிரைச் சவாரி போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

அத்துடன், இதுவரை 16 குதிரைச் சவாரி போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ள மெட்டில்டா கார்ல்சன், உலகின் முன்னணி குதிரைச்சவாரி வீரர்கள் பங்குபற்றும் குளோபல் சம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்நது பங்கேற்று வருகின்றார்

இந்த நிலையில், தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவருகின்ற மெட்டில்டா, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற முதலாவது குதிரைச்சவாரி வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

தத்தெடுக்கப்பட்டட மெட்டில்டா

1984 செப்டமர் மாதம் 27ஆம் திகதி கண்டியில் பிறந்து 3 மாத கைக்குழந்தையாக இருந்தபோது சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களால் மெட்டில்டா கார்ல்சன் தத்தெடுக்கப்பட்டார்.

சுவீடனில் குதிரைச்சவாரி போட்டிகள் பிரபல்யம் என்பதால் சிறுவயது முதல் அங்கு சென்று மெட்டில்டா, 8 வயது முதல் முறையாக ரய்டார்சோல்ஸ் கெப் என்ற விளையாட்டுக் கழகத்தில் இணைந்து பயிற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளார்.  

உயரம் பாய்தலில் தெற்காசிய சாதனையை முறியடித்தார் உஷான் திவங்க

போனி குதிரையில் தனது குதிரைச் சவாரியை ஆரம்பித்த அவர், 18ஆவது வயதில் குதிரைச் சவாரி போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்தார். தற்போது ஜேர்மனியின் ஹெம்பேர்கில் 15 குதிரைகளை வைத்து சொந்தமாக குதிரைச்சவாரி தொழில் செய்து வருகின்றார்.

இறுதியாக, கடந்த 2017இல் இலங்கைக்கு முதல்தடவையாக வந்த மெட்டில்டா, தனது பெற்றோரை நேரில் சென்று பார்த்ததுடன், 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஜேர்மனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்

மெட்டில்டா எவ்வாறு ஒலிம்பிக் தகுதிபெற்றார்?

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச் சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச் சவாரி சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இதில் 15 பேர் மாத்திரம் எந்தவொரு அணிக்காகவும் போட்டியிடாத தனிநபர் வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் F.R.I எனப்படும் ஒலிம்பிக் தரவரிசைப் பட்டியல் படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, மத்திய ஆசிய வலய மற்றும் ஆசிய ஷியானா வலய நாடுகளில் இருந்து இரண்டு வீராங்கனைகளுக்கு மாத்திரம் வாய்ப்பு கிடைத்தது

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்காவுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்குமா?

இதில் சீனா தாய்ப்பே வீராங்கனை ஜெஸ்மின் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 2ஆவது இடத்தை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக் கொண்டார். இதன்படி, மெட்டில்டா கார்ல்சன் இம்முறை ஒலிம்பிக்கில் இசையுடனான குதிரைச்சவாரி (Show Jumper) போட்டிப் பிரிவில் களமிறங்கவுள்ளார்

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதுவரை இலங்கையிலிருந்து எந்தவொரு வீரரும் தகுதியினைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், மெட்டில்டா கார்ல்சனின் பங்குபற்றலானது இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது

அதுமாத்திரமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்கள் இப்போட்டிகளுக்காக தேர்வாகியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இலங்கைக்கு முன்னுரிமை

இதேநேரம், 2018 றியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக தகுதிபெற அவர் இலங்கையின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அதுமாத்திரமின்றி, சுவீடன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மெட்டில்டா கார்ல்சனுக்கு இருந்த போதிலும், அவர் தனது தாய் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

“2022இல் 100 இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பு குறித்து முதல்தடவையாகப் பேசிய மெட்டில்டா கார்ல்சன்

“நான் கைக்குழந்ததையாக இருந்தபோது சுவீடன் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டதை மிகப் பெரிய பாக்கியமாகவும், ஆசிர்வாதமாகவும் நம்புகிறேன். எனது சுவீடன் பெற்றோரும், சகோதர, சகோரியும் என்மீது எப்பொழுதும் அன்பு வைத்தனர். எனது எதிர்கால கனவுகளை நனவாக்குவதற்கு அவர்கள் எப்போதும் உறுதுணையாக இருந்தனர். இதன்காரணமாகத் தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வரத்தையும் பெற்றுக் கொண்டேன்

நான் சுவீடனில் வளர்ந்தாலும், எப்போதும் ஒரு இலங்கையர் என்ற கௌரவத்துடன் தான் வாழ்ந்து வந்தேன். ஆனால் இந்த அளவு தூரத்துக்கு அழைத்து வந்த சுவீடன் நாட்டை ஒருபோதும் மறக்கமாட்டேன். எதுஎவ்வாறாயினும், ஒரு இலங்கையராக இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுப்பேன்” என தெரிவித்தார்

மெட்டில்டாவின் பெயர் நீக்கம்

கடந்த வருடம் ஜனவரி மாதம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது

எனினும், மூன்று மாதங்கள் செல்வதற்குள் அவரது பெயரை சர்வதேச குதிரைச் சவாரி சம்மேளனம் நீக்கியது. இதனையடுத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து சுவிட்சர்லாந்தின் லுஸேனில் அமையப்பெற்றுள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்தார். இதற்கு இலங்கை குதிரைச் சவாரி சம்மேளனமும், தேசிய ஒலிம்பிக் குழுவும் பூரண பங்களிப்பினை வழங்கியிருந்தது

முன்னதாக இடம்பெற்ற வழக்கு விசாரணையில் மெட்டில்டா கார்ல்சனின் பெயர் நீக்கப்பட்டது அநீதி அல்ல என தெரிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது வட கொரியா

எனினும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை கைவிடாத மெட்டில்டா கார்ல்சன், குறித்த தீர்ப்புக்கு எதிராக ஜெனீவாவில் மேன்முறையீடு செய்தார். இதன்படி, மெட்டில்டா கார்ல்சன் சார்பில் சுவீடனைச் சேர்ந்த சட்டத்தரணிகள் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பில் தமது கட்சிக்காராரின் நியாயங்களை முன்வைக்க குறித்த வழக்கின் தீர்ப்பானது மெட்டில்டா கார்ல்சனுக்கு சாதகமாக வழங்கப்பட்டது

இதில் மெட்டில்டா கார்ல்சன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதியினைப் பெற்றுக்கொண்ட பிறகுதான் சர்வதேச குதிரைச் சவாரி சம்மேளனம் வீரர்களுக்கான தரவரிசையில் மாற்றங்களை செய்துள்ளது. இதனால் மெட்டில்டா கார்ல்சன் தரவரிசையில் பின்தள்ளப்பட்டு ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்ததாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்தனர்

இதன்காரணமாக குறித்த வழக்கு விசாரணையின் பிறகு மெட்டில்டா கார்ல்சனுக்கு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது

15 கோடிக்கு குதிரை

மெட்டில்டா கார்ல்சன், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் 6 யூரோ மில்லியன் செலவில் (இலங்கை பணப்பெறுமதியில் 15 கோடி) குதிரையொன்றை வாங்கியுள்ளார்

மெட்டில்டா கார்ல்சனின் காதலனும், ஜேர்மனியில் குதிரைகளை இனப்பெருக்கம் செய்கின்ற செல்வந்தருமான மென்பிரெட் வோன் எல்வடர்னிடமிருந்து தான் அவர் இந்தக் குதிரையை வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை வீரர் ரொஷான் சாதனை

இதுதொடர்பில் இலங்கை குதிரை சவாரி சம்மேளனத்தின் தலைவர் சுரன்ஜித் பிரேமதாஸ கருத்து தெரிவிக்கையில்

“மெட்டில்டா கார்ல்சன் மிகவும் சிறந்த மனநிலையுடன் இருப்பதால் பதக்கமொன்றை வெல்வதற்கான எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், அவர் போட்டிக்காக பயன்படுத்தவுள்ள குதிரை உலகின் நம்பர்-1 குதிரைகளில் ஒன்றாகும். 12 வயதான அந்தக் குதிரை ஆண் குதிரை என்பதால் அதிக விலை கொண்டதாக உள்ளது

எனவே, மிகவும் வேகத்தைக் கொண்ட ஹைப்பிரிட் வகையைச் சேர்ந்த குதிரையுடன் மெட்டில்டா கார்ல்சன் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கவுள்ளமை பெருமையளிக்கிறது” என குறிப்பிட்டார்.

சாதிப்பாரா மெட்டில்டா கார்ல்சன்?

தனது தாய் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல்தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள 37 வயதான மெட்டில்டா கார்ல்சன், 20 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கமொன்றை வென்று கொடுக்கும் கனவுடன் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்

அதுமாத்திரமின்றி, இலங்கையில் இதுவரை எந்தவொரு வீரரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பையோ அல்லது அடைவுமட்டத்தையோ பெற்றுக்கொள்ளவில்லை

எனவே, மெட்டில்டா கார்ல்சனின் ஒலிம்பிக் பிரவேசமானது இலங்கையர்களாகிய எமக்கு மிகப் பெரிய கௌரவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது

 >>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<<