2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன்

134
 

ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச்சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார்.  

சொப்பின் வீஏ (Chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்

டோக்கியோ  ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச்சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச்சவாரி சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினால் அனுமதி அளித்துள்ளது

இதில் 15 பேர் மாத்திரம் எந்தவொரு அணிக்காகவும் போட்டியிடாத தனிநபர் வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் எப்.ஆர். எனப்படும் ஒலிம்பிக் தரவரிசைப் பட்டியல் படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ

பாடசாலையின் இடைவெளி நேரங்களில்…..

இதன்படி, மத்திய ஆசிய வலய மற்றும் ஆசிய ஷியானா வலய நாடுகளில் இருந்து 2 வீராங்கனைகளுக்கு மாத்திரம் வாய்ப்பு கிடைத்தது

இதில் சீனா தாய்ப்பே வீராங்கனை ஜெஸ்மின் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 2ஆவது இடத்தை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக் கொண்டார். இதன்படி, மெட்டில்டா கார்ல்சன் இம்முறை ஒலிம்பிக்கில் இசையுடனான குதிரைச்சவாரி (Show Jumper) போட்டிப் பிரிவில் களமிறங்கவுள்ளார்.  

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதுவரை இலங்கையிலிருந்து எந்தவொரு வீரரும் தகுதியினைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், மெட்டில்டா கார்ல்சனின் பங்குபற்றலானது இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது

அதுமாத்திரமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்கள் இப்போட்டிகளுக்காக தேர்வாகியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

1984இல் இலங்கையில் பிறந்து 3 மாத கைக்குழந்தையாக இருந்தபோது சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட மெட்டில்டா கார்ல்சன், சுவீடனின் தேசிய மட்ட குதிரைச்சவாரிப் போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்றார்

அத்துடன், உலக நாடுகளில் நடைபெற்று வருகின்ற பல்வேறு குதிரைச்சவாரி போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்ட அவர், கடந்த வருடத்தில் மாத்திரம் மெக்ஸிகோ சிட்டி, மியாமி, பரிஸ், ரோம், மொனாக்கோ, லண்டன், டோஹா மற்றும் ப்ரேக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற குதிரைச்சவாரி போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

அத்துடன், இதுவரை 16 குதிரைச்சவாரி போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ள மெட்டில்டா கார்ல்சன், உலகின் முன்னணி குதிரைச்சவாரி வீரர்கள் பங்குபற்றும் குளோபல் சம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றார்

இந்த நிலையில், தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவருகின்ற மெட்டில்டா, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற முதலாவது குதிரைச்சவாரி வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

சுவீடனில் குதிரைச்சவாரி போட்டிகள் பிரபல்யம் என்பதால் சிறுவயது முதல் அங்கு சென்ற மெட்டில்டா, 8 வயதில் முதல் முறையாக ரய்டார்சோல்ஸ் கெப் என்ற விளையாட்டுக் கழகத்தில் இணைந்து பயிற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளார்.  

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல……

போனி குதிரையில் தனது குதிரைச் சவாரியை ஆரம்பித்த அவர், 18ஆவது வயதில் குதிரைச்சவாரி போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்தார். தற்போது ஜேர்மனியின் ஹெம்பேர்கில் 15 குதிரைகளை வைத்து சொந்தமாக குதிரைச்சவாரி தொழில் செய்து வருகின்றார்.

இறுதியாக, கடந்த 2017இல் இலங்கைக்கு முதல்தடவையாக வந்த மெட்டில்டா, தனது பெற்றோரை நேரில் சென்று பார்த்ததுடன், 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஜேர்மனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்

இதேநேரம், 2016 றியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக தகுதிபெற அவர் இலங்கையின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பு குறித்து முதல்தடவையாக கருத்து தெரிவித்த மெட்டில்டா கார்ல்சன்

”நான் கைக்குழந்ததையாக இருந்தபோது சுவீடன் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டதை மிகப் பெரிய பாக்கியமாகவும், ஆசிர்வாதகமாகவும் நம்புகிறேன். எனது சுவீடன் பெற்றோரும், சகோதர, சகோரியும் என்மீது எப்பொழுதும் அன்பு வைத்தனர்

இலங்கை கால்பந்துக்கு ஏமாற்றம் தந்த 2019

ஐரோப்பிய கழகங்களில் லிவர்பூல் அணியின்……

எனது எதிர்கால கனவுகளை நனவாக்குவதற்கு அவர்கள் எப்போதும் உறுதுணையாக இருந்தனர். இதன்காரணமாகத் தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வரத்தையும் பெற்றுக் கொண்டேன்” என்றார்.

சுவீடன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மெட்டில்டா கார்ல்சனுக்கு இருந்த போதிலும், அவர் தனது தாய் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை சிறப்பம்சமாகும்

”நான் சுவீடனில் பிறந்து வளர்ந்தாலும், எப்போதும் ஒரு இலங்கையர் என்ற கௌரவத்துடன் தான் வாழ்ந்து வந்தேன். ஆனால் இந்த அளவு தூரத்துக்கு அழைத்து வந்த சுவீடன் நாட்டை ஒருபோதும் மறக்கமாட்டேன்

எதுஎவ்வாறாயினும், ஒரு இலங்கையராக இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுப்பேன்” என தெரிவித்தார்.  

எனவே, தனது தாய் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல்தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள 35 வயதான மெட்டில்டா கார்ல்சன், 20 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கமொன்றை வென்று கொடுக்க வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<