இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான இருவழி கடல்நீச்சலைப் பூர்த்திசெய்த அவர் ஆசிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று முன்தினம் (10) இலங்கையின், தலைமன்னாரிலிருந்து அதிகாலை 2.00 மணியளவில் இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி பாக்கு நீரிணை ஊடாக நீந்திச் சென்ற அவர், அங்கிருந்து மீண்டும் நேற்று (11) காலை 7.00 மணியளவில் இலங்கை திரும்பியுள்ளார்.
இதற்காக அவர், 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை எடுத்துக் கொண்டுள்ளதன் மூலம், புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு நிலைநாட்டப்பட்ட இச்சாதனை யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் என அழைக்கப்படும் வி.எஸ். குமார் ஆனந்தனுக்கு உரித்தாக இருந்தது.
1943 ஆம் ஆண்டு (மே 25) பிறந்த, ‘ஆழிக்குமரன்‘ என அழைக்கப்படும் செல்வக்குமார் ஆனந்தன், நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். அவர் 1971ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பாக்கு நீரிணை ஊடாக இந்தியா சென்று, மீண்டும் இலங்கை திரும்புவதற்கு 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தார்.
ஜூலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டுத் தினமாக பிரகடனம்
அவரது 50 வருடங்களாக முறியடிக்கப்படாத சாதனையே இன்று முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒன்பது கின்னஸ் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஆழிக்குமரன், இறுதியாக 1984ஆம் ஆண்டு (1984.08.06) ஆங்கிலக் கால்வாயை கடந்து சாதனை படைக்க எடுத்த முயற்சியின்போது உயிரிழந்தார்.
இதேவேளை, தென் மாகாணத்தில் தலல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ரொஷான் அபேசுந்தர, மாத்தறை மத்திய மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் ஆவார்.
இதனிடையே, 2008ஆம் ஆண்டு ரொஷான் அபேசுந்தர விமானப்படையில் இணைந்தார்.
கடற்கரை விளையாட்டுக்கான கேந்திர நிலையமாக திருகோணமலை
இதுஇவ்வாறிருக்க, குறித்த சாதனைக்கு தயாராகும் வகையில், கடந்த ஜனவரி 03ஆம் திகதி, மாத்தறையிலிருந்து கொக்கல வரையான 25 கிலோமீற்றர் கடல் பயணத்தை 10 மணித்தியாலம் 37 நிமிடங்களில் நீந்திக் கடந்ததோடு, கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி மாத்தறையிலிருந்து ஹிக்கடுவ சென்று அங்கிருந்து உணவட்டுன வரையான 49 கிலோமீற்றர் கடல் பயணத்தை நீந்திக் கடக்க 23 மணித்தியாலங்கள் 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதன் மூலம் தேசிய சாதனையை அவர் இரு முறை முறியடித்துள்ளார்.
இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான ஜுலியன் போலிங்கிடம் பயிற்சிகளைப் பெற்ற ரொஷான் அபேசுந்தர, அமெரிக்க நீச்சல் பயிற்சியாளர்கள் சங்கத்துடன் இணைந்த மூன்றாம் நிலை நீச்சல் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<