பிக்பேஷ் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்

145
Cricket.com.au

அவுஸ்திரேலியாவில் தற்சமயம் நடைபெற்றுவரும் பிக்பேஷ் (big bash) தொடரில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இன்று (12) நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 147 ஓட்டங்களை குவித்து பிக்பேஷ் வரலாற்றில் 2 வருடங்களுக்கு பின்னர் சாதனையை முறியடித்துள்ளார். 

கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்றுவரும் டி20 லீக் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் பிக்பேஷ் டி20 லீக் தொடர் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 9 ஆவது பருவகாலத்திற்கான பிக்பேஷ் லீக் தொடர் தற்சயம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 

இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் டொம் மூடி

இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் டொம்…

குறித்த பிக்பேஷ் தொடரின் 34 ஆவது லீக் போட்டி இன்று (12) இரவு நேர போட்டியாக மெல்பேர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 8 ஆவது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

இப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் க்ளேன் மெக்ஸ்வெல் தலைமையிலான மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை குவித்தது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சகலதுறை வீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காது 79 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 13 பௌண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 147 ஓட்டங்களை குவித்தார். 

ஆரம்பத்தில் ஸ்டொய்னிஸ் நிதானமாகவே துடுப்பெடுத்தாடினார். 36 பந்துகளில் முதல் அரைச்சதத்தை கடந்தார். அதனை தொடர்ந்து அதிரடி ஆரம்பித்தது. அடுத்த 24 பந்துகளில் அடுத்த அரைச்சதத்தை கடக்க மொத்தமாக 60 பந்துகளில் சதம் கடந்தார். சதம் கடந்ததை தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிய ஆரம்பித்ததது. அடுத்து வந்த இறுதி 19 பந்துகளில் அதிரடியாக 47 ஓட்டங்களை விளாசினார்.  

குணதிலக்கவின் விக்கெட்டை கைப்பற்றி டி20 அரங்கில் சாதனை படைத்த ஜஸ்பிரிட் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா டி20…

220 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. எதிரணியினருக்கு துடுப்பாட்டத்தில் மரண பயம் காட்டிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். 

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இவ்வாறு அதிரடியாக 147 ஓட்டங்களை குவித்ததன் மூலம் பிக்பேஷ் லீக் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தனிநபர் ஓட்டங்களை குவித்த வீரராக 2 வருடங்களுக்கு பின்னர் மற்றுமொரு அவுஸ்திரேலிய வீரர் டிஆர்சி ஷோர்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார். டிஆர்சி ஷோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களை குவித்திருந்தார். 

பிக்பேஷ் வரலாற்றில் பெறப்பட்ட அதிக தனிநபர் ஓட்டங்களிள் பட்டியல்

  1. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (மெல்பேர்ன் ஸ்டார்ஸ்) – 147 (2020)
  2. டிஆர்சி ஷோர்ட் (ஹோர்பாட் ஹரிகேன்ஸ்) – 122 (2018)
  3. லுக் ரைட் (மெல்பேர்ன் ஸ்டார்ஸ்) – 117 (2012)
  4. ஜெக் வெதரெல்ட் (அடிலெய்ட் ஸ்ட்ரைக்கேர்ஸ்) – 115 (2018)
  5. பென் மெக்டெர்மொட் (ஹோர்பாட் ஹரிகேன்ஸ்) – 114 (2017)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<