பெனால்டியில் நீர்கொழும்பு யூத்தை வீழ்த்தி காலிறுதிக்குள் சென்றது சௌண்டர்ஸ்

301
Saunders SC

FA கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னைய சுற்றின் ஒரு ஆட்டமாக களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டி 2-2 என சமநிலையில் முடிவுற, பெனால்டி முறையில் வெற்றியைத் தட்டிச்சென்றது சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம். இந்த வெற்றியின்மூலம் அவ்வணி அடுத்த சுற்றான காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இரு அணிகளும் தாம் பங்குபற்றிய கடைசி இரு போட்டிகளிலும் தலா 15 கோல்களைப் பெற்றிருந்ததால் இப்போட்டியிலும் கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது.

பத்துப் பேர் கொண்ட பெலிகன்ஸ் அணியை வீழ்த்திய கொழும்பு கால்பந்துக் கழகம்

இந்த பருவகால FA கிண்ணத் தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில்..

போட்டியின் 4ஆவது நிமிடத்திலேயே நீர்கொழும்பு யூத் முன்னிலை பெற்றது. கவுண்டர் முறையில் உருவான கோல் வாய்ப்பை பிரியங்கர சில்வா கோலாக்கினார்.  

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நீர்கொழும்பு யூத் அணி, போட்டியின் 8ஆவது நிமிடத்தில் தமது கோல் கணக்கை இரட்டிப்பாக்கியது. பிரதீப் பெர்ணான்டோ லாவகமாக பந்தை கோல்காப்பாளரிற்கு மேலாக அடித்து தனது கோல் பங்களிப்பை வழங்கினார்.

இரண்டு கோல்களினால் பின்னடைவை சந்தித்த சௌண்டர்ஸ் அணி, இளம் கோல் காப்பாளர் தினேஷ் மகேந்திரனுக்குப் பதிலாக அனுபவ வீரர் அசங்க விராஜினை மாற்றம் செய்தது.  

பின்னர் சுதாகரித்து விளையாடிய சௌண்டர்ஸ் கழகம் 16ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றது. உதார இந்திரீவ அபாரமாக தனது அணிக்காக முதல் கோலினைப் போட்டார்.

அதன் பின்பு நீர்கொழும்பு யூத் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. எனினும் பிரியங்கர சில்வா அடித்த உதையை அசங்க விராஜ் தடுத்தார்.

முதலாம் பாதி முடிவடையும் தறுவாயில் கோர்ணர் உதை மூலம் அடிக்கப்பட்ட பந்தை இசுரு பெரேரா தலையால் முட்டி கோலாக்கினார்.

முதல் பாதி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 2 – 2 நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியை அதிரடியாக ஆரம்பித்தது சௌண்டர்ஸ் அணி. எனினும் அவர்களுக்கு ஈடு கொடுத்து நீர்கொழும்பு யூத் அணி விளையாடத் தொடங்கியது.  

>> போட்டியின் புகைப்படங்கள் <<

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ராஜரட்ணம் மினோன் நேரடியாக சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியனுப்பப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் போராட வேண்டிய நிலைக்கு நீர்கொழும்பு யூத் அணி தள்ளப்பட்டது.

எனினும் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக சௌண்டர்ஸ் அணியை கோல் அடிக்க விடாது நீர்கொழும்பு யூத் வீரர்கள் தடுத்தனர். குறிப்பாக செண்டர்ஸ் அணியின் பிரபல வீரர்களான சனோஜ் சமீர மற்றும் சுந்தர்ராஜ் நிரேஷ் ஆகியோர் போட்டியின் இறுதி நேரத்தில் அடித்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டன.

இரு தரப்பினரதும் சிறந்த தடுப்பாட்டம் காரணமாக இரண்டாவது பாதியில் எந்த தரப்பினராலும் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.

முழு நேரம்: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 2 – 2 நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்

ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றதால் பெனால்டி வாய்ப்பிற்கு செல்ல, நீர்கொழும்பு யூத் அணி போட்டி அழுத்தத்தினை தாங்க முடியாமல் கவனத்தை சிதறவிட்டது. இதனால் 3 பெனால்டி உதைகளை அவ்வணி வீரர்கள் தவறவிட்டனர்.

மறுபுறம், சௌண்டர்ஸ் அணியின் உதார பெனால்டியை கோட்டை விட அனுபவ வீரர்கள் ஒழுங்காக அடிக்க போட்டியை 3-1 என சௌண்டர்ஸ் அணி கைப்பற்றியது.

வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளூ ஸ்ரார்

இவ்வருட FA கிண்ண போட்டியில் அபாரங்காட்டிய யாழ்ப்பாணம் பாடும்மீன்..

இந்தப் போட்டியில் அனைத்து பெனால்டி வாய்ப்புக்களின்போதும் கோல் காப்பாளர் அசங்க விராஜ் சிறந்த முறையில் செயற்பட்டு அணியின் வெற்றியில் பங்கு வகித்த முக்கிய நபராக இருந்தார்.

பெனால்டி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 3 – 1 நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்

ThePapare.com ஆட்ட நாயகன் அசங்க விராஜ் (சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)

வெற்றி பெற்ற சௌண்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் சுமித் வல்பொல எம்முடன் உரையாடியபோது, “எமது அணி இன்று பெரிதாக விளையாடவில்லை. மிகவும் சூடான காலநிலையும் இதற்கு ஒரு காரணமாகும். அதனைத் தாண்டி எம்மால் மேலதிக கோல்களை போட்டிருக்க முடியும்.

போட்டியிலே 2 கோல்களால் பின்னடைவிலிருந்தபோதும் அனுபவ வீரர்கள் எமது வெற்றியை உறுதி செய்தனர். கோல் காப்பாளரை மாற்றம் செய்ததன் நோக்கமும் அதுதான்” என்றார்.

கோல் பெற்றவர்கள்

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் உதார இந்திரீவ 16’, இசுரு பெரேரா 39’

நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்பிரியங்கர சில்வா 04’, பிரதீப் பெர்ணான்டோ 08’

மஞ்சள் அட்டை

நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்மதுஷாந்த திஸ்ஸர 52’, மொஹமட் நுஸ்லான் 89’

சிவப்பட்டை

நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்ராஜரத்னம் மினோன் 65’