புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ‘ட்ரகன்ஸ் லீக் – 2017′ வெற்றிக்கிண்ணப் போட்டிகளில் 24ஆவது போட்டி புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் புத்தளத்தின் தலை சிறந்த அணியான நியு ஸ்டார் மற்றும் புத்தளத்தின் அனுபவமிக்க அணியான பொல்டன் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

இப்போட்டியில் அதிகமான இளம் வீரர்களுடன் விளையாடிய பொல்டன் கழகத்தினை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியு ஸ்டார் மூன்று புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.

மலியதேவ கல்லூரியை இலகுவாய் வீழ்த்திய புத்தளம் ஸாஹிரா

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில்…

போட்டியின் முதலாவது வாய்ப்பாக, நியு ஸ்டார் அணியின் அஸ்பான் பந்தினை இன்ஸாமிடம் கொடுக்க, அவர் பந்தை வந்த வேகத்திலே வேகமாக உயர்த்தி அடித்தார். இதன்போது எதிரணியின் கோல் காப்பாளர் ஜட்டா தன் கையால் குத்திவிட பந்து கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு வெளியேறியது.

அடுத்த கனமே பொல்டன் கழகத்திற்கு ப்ரீ கிக் கிடைக்கப்பெற அதை அறூஸ் உயர்த்தி அடித்தார். அதனை உயரே எழுந்து இஹ்ஸாம் தலையால் முட்ட பந்து கம்பத்தில் பட்டு வெளியேற சிறப்பான முயற்சி பலனலிக்காமல் போனது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் அஸ்பான் இலகுவான கோலுக்கான பந்துப் பறிமாற்றத்தினை அத்பானிடம் கொடுக்க அதை அவர் ஜட்டா இல்லாத பக்கமாய் இலகுவாக உதைத்துவிட நியு ஸ்டார் கோல் கணக்கினை ஆரம்பித்தது.

அடுத்த நிமிடமே பொல்டன் அணியின் தலைவர் இஹ்ஸான் மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து பந்தினை கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க பந்து கம்பத்தின் மேலால் செல்ல தோல்வியில் முடிந்தது முயற்சி.

பந்து இரு அணியினரின் கம்பங்களுக்கும் மாறி மாறி சென்று கொண்டிருக்க போட்டி விறு விறுப்பானது.

போட்டியின் 29வது நிமிடத்தில் பொல்டனின் இளம் வீரர் அர்க்கம் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து பந்தினை அடிக்க அது முனீரின் கைகளுக்கே செல்ல, மற்றொரு முயற்சி வீணானது.

மேலும் 37வது நிமிடத்தில் ஆமித் கொடுத்த பந்தினை அஸ்பான் கம்பம் வரை கொண்டு சென்று உதைக்க பந்து கம்பத்திற்கு அருகாமையால் வெளியே சென்று ஏமாற்றமளித்தது.

பேல்ஸ் – த்ரீ ஸ்டார் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து…

இவ்வாறு இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புக்கள் மாறி மாறி வந்த போதிலும் இரு அணி வீரர்களும் வாய்ப்பினை சிறப்பாக நிறைவு செய்யத்தவறினர்.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக (44) முஸாதிக்கீன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை இஹ்ஸான் தடுப்பு வீரர்களைத் தாண்டிவந்து கம்பத்துக்கு மேலால் அடித்து விட முதற் பாதியின் இறுதி முயற்சியும் தவறவிடப்பட்டது.

முதல் பாதி: நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 –  0 பொல்டன் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியில் விட்ட தவறுகளை திருத்தி கோல் பெற வேண்டும் என்ற உத்வேகத்தோடு இரு கழக வீரர்களும் இரண்டாவது பாதியில் களம் கண்டனர்.

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகி மூன்று நிமிடங்களில் இன்ஸாம் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ஸாஜித், கம்பத்திற்கு வேகமாக அடிக்க பொல்டன் கோல்காப்பாளர் ஜட்டா சிறப்பாக அதைப் பிடித்துக் கொண்டார்.

மேலும் போட்டியின் 52வது நிமிடத்தில் அறூஸ் கொடுத்த பந்தினை அர்கம் உயர்த்தியவாறு அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

மேலும் 8 நிமிடங்கள் கழிந்த நிலையில் ஹிஜாஸ் உள்ளனுப்பிய பந்தை அர்கம் பெற்று சிறந்த பரிமாற்றல் மூலம் இஹ்ஸானிடம் ஒப்படைத்தார். இஹ்ஸான் கம்பம் நோக்கி உதைத்துவிட பந்து முனீரின் கையில் பட்டு மேலெழுந்து கம்பத்தில் பட்டவாறு வெளியேற மிகச் சிறந்த முயற்சி வீணானது.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் முஸ்பிக்கிடமிருந்து இப்லால் முறையற்ற விதத்தில் பந்தினை பறிக்க முனைகையில் முஸ்பிக் கீழே விழுந்தார். இதனால் ஏற்கனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது மஞ்சள் அட்டையும் இப்லாலுக்கு வழங்கப்பட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட மேலும் பின்னடைவு கண்டது பொல்டன்.

மேலும் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் இஹ்ஸான் கொடுத்த பந்தினை அர்கம் பெனால்டி பகுதிக்கு அருகிலிருந்து உதைக்க முனீர் நேர்த்தியாகப் பற்றிக் கொண்டார்.

எனினும் போட்டியின் போக்கினை மாற்றும் வகையில் 80வது நிமிடத்தில் அஸ்பான் கொடுத்த பந்தினை இன்ஸாம் மேலால் உயர்த்தி கம்பத்திற்குள் அனுப்ப ஜட்டா சற்று முன்னேறி தடுக்க முயன்றார். எனினும், அவரது கைகளில் படாமலே பந்து கம்பத்தினுள் நுழைய தன் கோல் கணக்கினை இரட்டிப்பாக்கி வெற்றியை அண்மித்தது நியு ஸ்டார் கழகம்.

தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை

லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது…

10 வீரர்களுடன் ஒரு கோலுக்காய் பேராடிக்கொண்டிருந்த பொல்டன் கழகத்திற்கு கோல் கனவை நனவாக்கும் சந்தர்ப்பத்தை நியு ஸ்டாரின் தடுப்பு வீரர்கள் வழங்காமல் காத்துக் கொண்டனர்.

போட்டியின் இறுதி நிமிடத்தில், இறுதி முயற்சியாக அர்கம் செலுத்திய உட்புகுத்தலை இஹ்ஸான் மிக வேகமாக கம்பம் நோக்கி உதைக்க சிறந்த முறையில் முனீர் பாய்ந்து தன் நெஞ்சோடு பந்தை பற்றிக்கொள்ள இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

போட்டி நிறைவுற்றதாய் நடுவர் அறிவிக்க அனுபவம் மிக்க பொல்டன் அணியினை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி 3 புள்ளிகளை தன் புள்ளிக்கணக்கில் சேர்த்துக் கொண்டது பலம் மிக்க நியு ஸ்டார் கழகம்.

முழு நேரம்: நியு ஸ்டார் கழகம் 2 –  0  பொல்டன் கழகம்.

கோல் பெற்றவர்கள்

நியு ஸ்டார் கழகம் – அத்பான் 14’, இன்ஸாம் 80’

மஞ்சள் அட்டை

பொல்ட்டன் கழகம் – இஹ்ஸான் 47’, இப்லால் 63’ & 67’

நியு ஸ்டார் கழகம் – ஸாஜித் 59’

சிவப்பு அட்டை

பொல்ட்டன் கழகம் – இப்லால் 67’