மன்னார் மண்ணில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்தது சென்.லூசியா

963
Mannar Football league

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த சென்.லூசியா விளையாட்டுக் கழகம், மன்னாரின் பலம் மிக்க அணி தாம் தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.

குறித்த போட்டித் தொடர் கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களிலும் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மன்னார் லீக்கில் பதிவு செய்யப்பட்ட 36 கழகங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியில் பங்குபற்றியிருந்தன.

காலிறுதிச் சுற்றுப் போட்டிகள்

A பிரிவில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் முருங்கன் பொதுசன சேவைகள் அணியும் பாலம்பிட்டி ஐக்கிய அணியும் மோதின. இதில் போட்டி நேர முடிவில் இரண்டு அணிகளும் எதுவித கோல்களையும் பெறாததனால் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் பொதுசன சேவைகள் அணி 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

>> மன்னார் மாவட்ட அணியை பெனால்டியில் வீழ்த்திய யாழ் மாவட்ட அணி வடக்கின் சம்பியனாகியது

A பிரிவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் அணியும் சாவக்கட்டு கில்லறி அணியும் மோதின. இதில் ஜோசப்வாஸ் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

அதேபோன்று, மாளிகைப்பிட்டி சித்திவிநாயகர் அணியும் பண்டிவிரிச்சான் சென்.மரியகொறற்றி அணியும் B பிரிவின் முதலாவது காலிறுதிப் போட்டியில் மோதின. இதில் சென்.மரியகொறற்றி அணி 1-0 என வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

அதனைத் தொடர்ந்து B பிரிவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பலம் மிக்க இரு அணிகளான பள்ளிமுனை சென்.லூசியா அணியும் தேவன்பிட்டி சென்.சேவியர் அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நிமிடத்தில் சென்.லூசியா அணி கோல் ஒன்றினைப் போட்டு 1-0 என வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

போட்டிகளின் புகைப்படங்களைப் பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்

அரையிறுதிப் போட்டிகள்

முதலாவது அரையிறுதிப் போட்டியானது நடப்புச் சம்பியன் பொதுசன சேவைகள் அணிக்கும் தோட்டவெளி ஐக்கிய அணிக்கும் இடையில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் தங்களுக்கான கோல் போடும் பல சந்தர்பங்களை தவறவிட்டமை இரு அணி ரசிகர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

போட்டி நேர முடிவின்போது இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.  

இதில் ஐக்கிய அணியின் கோல் காப்பாளர் ஜேம்ஸ் எதிரணியின் இரண்டு உதைகளை சாதுர்யமாகத் தடுத்து அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். எனினும் அவ்வணியின் வீரர்கள் தமக்கு வழங்கப்பட்ட உதைகளின்போது பந்தை கோல் கம்பத்திற்கு வெளியே உதைந்தனர். இதனால் பொதுசன சேவைகள் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது சென்.லூசியா அணிக்கும் பண்டிவிரிச்சான் மரியகொறற்றி அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டி ஆரம்பித்து 7ஆவது நிமிடத்தில் லூசியா அணியின் பிங்கோவின் சிறப்பான கோல் மூலம் அவ்வணி முதல் பாதியாட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியாட்டத்திலும் சென்.லூசியா அணியின் உதயன் மற்றுமொரு கோலைப் பெற்று முன்னிலை கோலை இரட்டிப்பாக்கினார். எனினும், ஆட்டத்தின் இறுதி வரை பண்டிவிரிச்சான் மரியகொறற்றி வீரர்களால் எந்த கோலையும் பெற்றுக்கொள்ளவில்லை.  

எனவே, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சென்.லூசியா அணி கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி மோதலுக்குத் தெரிவாகியது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டியில் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ குணசீலன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நாலா பக்கமும் உதைபந்தாட்ட ரசிகர்களினால் மைதானம் நிரம்பிவழிய இறுதிப் போட்டி ஆரம்பமாகியது.  

பலம் பொருந்திய பல அணிகளை வீழ்த்திய பெருமையுடன் கிண்ணத்திற்கான இறுதி மோதலில் களம் கண்ட இரு அணி வீரர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விளையாட ஆரம்பித்தனர்.  

நடப்பச் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் முருங்கன் பொதுசன சேவைகள் அணியும், இழந்த சம்பியன் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பள்ளிமுனை சென்.லூசியா அணியும் மோதின.

இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படுத்தினர். இரு அணிகளும் கோல் பெறுவதற்கு மிகவும் கடுமையாகப் போராடினர். எனினும், களத்தடுப்பாளர்களின் சிறப்பான ஆட்டம் மூலம் இரு தரப்பினருக்கும் கோல்கள் எதுவும் இன்றி முதல் பாதி நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பித்ததும் போட்டியின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. எப்படியாவது போட்டியை சமனிலைக்கு கொண்டுவந்து சமநிலைத் தவிர்ப்பு உதை மூலம் போட்டியில் வெற்றிபெறுவதற்கு பொதுசன சேவைகள் அணி முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது.

ஏனெனில், பொதுசன சேவைகள் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னைய போட்டி, காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி என தொடர்ச்சியாக மூன்று போட்டிகளையும் சமநிலைத் தவிர்ப்பு உதை மூலமே வெற்றிபெற்றிருந்தது.

>> விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக நினைவுக் கிண்ண சம்பியனானது பொதுசன அணி

எனினும் சென்.லூசியா அணியின் சிறப்பான ஆட்டம் கைகொடுக்க ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிங்கோவின் அதிரடியான கோலின் மூலம் 1-0 என சென்.லூசியா முன்னிலை பெற்றது.  

இதனையடுத்து எஞ்சிய நேரத்தில் தமக்கான முதல் கோலைப் பெறுவதற்கு பொதுசன சேவைகள் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும், அவர்களது முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

எனவே, போட்டி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தினை தம்வசப்படுத்தியது சென்.லூசியா அணி.

விருதுகள்

இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் – பிங்கோ (சென்.லூசியா அணி)
தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – சதுசியன் (சென்.லூசியா அணி)
தொடரின் சிறந்த வீரர் – அமலனேசன் (பொதுசன சேவைகள் அணி)
தொடரின் சிறந்த அணி – தேவன்பிட்டி சென்.சேவியர் அணி

பரிசளிப்பு நிகழ்வின்போது, மன்னார் மண்ணில் 29 வருடங்களாக உதைப்பந்து விளையாடிவரும், தற்பொழுது 47 வயதான பாலம்பிட் ஐக்கிய அணி வீரர் கண்ணாவிற்கு சிறப்பு விருது ஒன்றும் வழங்கப்பட்டது.

சம்பியன் கிண்ணத்தை வென்ற சென்.லூசியா அணி
சம்பியன் கிண்ணத்தை வென்ற சென்.லூசியா அணி