பயிற்றுவிப்பாளராகும் கனவுடன் பயிற்சிப் பாடநெறிகளை முன்னெடுக்கும் இலங்கை வீரர்கள்

644

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர் கல்விப் பிரிவால் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் நிலை பயிற்சிக் கல்வியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், நுவன் குலசேகர, தம்மிக பிரசாத் மற்றும் அஜன்த மெண்டிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்ததுடன், தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எதிர்காலத்தில் இவ்வனைத்து வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் திறன் நிலையத்தில் நடாத்தப்படும் ஆறு நாட்கள் கொண்ட குறித்த பயிற்சிப் பட்டறையில் இலங்கை அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான பிரசாதினி வீரக்கொடி, கழக, பாடசாலை மட்ட பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.

மத்திய வரிசை துடுப்பாட்டம் அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது – டிக்வெல்ல

அத்துடன், குறித்த பயிற்சி நெறியானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் திறன் நிலையத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற பயிற்சியாளர்களான அவிஷ்க குணவர்தன, பியால் விஜேதுங்க, ஹேஷான் டி மெல், உபுல் சந்தன, ரவீந்திர புஷ்பகுமார, சமில கமகே, லங்கா டி சில்வா, சுமித்ர வர்ணகுலசூரிய, தாரக சமரதுங்க, தர்சன வீரசிங்க, டில்ஷான் பொன்சேகா ஆகியோராலும் உடற்கூற்று நிபுணர் ரஞ்சித் நாணயக்காரவாலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், உயர் திறன் நிலையத்தின் தலைமை கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியான அசங்க குருசிங்க இந்த பாடநெறி குறித்து கருத்து தெரிவிக்கையில், ”இலங்கை கிரிக்கெட்டினால் முன்னெடுக்கப்படுகின்ற பயிற்சியாளர்களுக்கான விசேட பயிற்சிநெறி இதுவாகும். இதன் மூலம் நவீன கிரிக்கெட் தொடர்பில் பயிற்சியாளர்களுக்கு தேவையான அறிவினைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். இதனால் தேசிய அணிக்கு எதிர்காலத்தில் திறமையான வீரர்களை உருவாக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து 40 வயதான ரங்கன ஹேரத் ஓய்வு பெறவுள்ளார்.

இந்த நிலையில், 36 வயதான நுவன் குலசேகர கடந்த வருடம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இறுதியாக விளையாடி இருந்தார்.

இதேவேளை, நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான அஜந்த மென்டிஸ் (33 வயது), வேகப்பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத் (35 வயது) ஆகியோர் இறுதியாக 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தனர். எனினும், இம்மூன்று வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…