இலங்கை வளர்ந்து வரும் அணியை தலைமை தாங்கும் சரித் அசலங்க

347

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை வளர்ந்துவரும் குழாமிற்கு சரித் அசலங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சம்மு அஷான் உப தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு அசேல குணரத்ன மற்றும் சதுன் வீரக்கொடி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.  

நடப்புச் சம்பியனான இலங்கை பாகிஸ்தானுடன் இணைந்து இம்முறை தொடரை நடத்துகிறது. இந்தத் தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சரித் அசலங்க இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட வளர்ந்துவரும் வீரர்களின் மேஜர் எமர்ஜிங் லீக் தொடர் உட்பட அண்மைக் காலமாக நடைபெற்ற தொடர்களில் சோபித்து வருகிறார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் அபார சதம் ஒன்றை பெற்ற அவர் தனது அணிக்கு முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை பெற்றுக்கொடுக்க உதவினார். கடந்த ஆண்டு வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண தொடரில் அவர் தொடர் நாயகன் விருதை வென்றார்.   

செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

அவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருக்கும் உப தலைவர் சம்மு அஷான் முதல் தர போட்டிகளில் நம்பிக்கை தரும் வீரராக உள்ளார். கடந்த ஜனவரியில் காயத்திற்கு உள்ளானதன் பின் இலங்கை அணியில் இடம்பெற தவறி வரும் அசேல குணரத்னவும் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கான தனது கன்னி சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் இலங்கை குழாமில் இடம்பெறாத அதிரடி இடது கை துடுப்பாட்ட வீரரான சந்துன் வீரக்கொடியும் தெரிவாளர்களின் பார்வையில் பட்டுள்ளார். 2018 SLC வளர்ந்துவரும் வீரர்களின் மேஜர் எமர்ஜிங் லீக் தொடரில் சிறப்பாக ஓட்டங்கள் குவித்ததை அடுத்தே அவர் இந்தக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

தனது 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டை முடித்துக் கொண்ட பாடசாலை மாணவனான நிஷான் மதுஷ்க இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற தொன்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடிய பின்னர் வளர்ந்து வரும் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

இலங்கை வளர்ந்துவரும் குழாம்

சரித் அசலங்க (தலைவர்), ஷம்மு அஷான் (உப தலைவர்), கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, ஹசித்த போயகொட, சந்துன் வீரக்கொடி, அசேல குணரத்ன, நிஷான் மதுஷ்க, ஜெப்ரி வன்டர்சே, லசித் அம்புல்தெனிய, நிஷான் பீரிஸ், ஷெஹான் மதுஷ்க, அசித பெர்னாண்டோ, ஜெஹான் டானியல், சாமிக்க கருணாரத்ன.     

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<