BPL தொடரில் மீண்டும் அபார ஆட்டம் காண்பித்த உபுல் தரங்க

1051

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T-20 கிரிக்கெட் தொடரில், உபுல் தரங்க மற்றும் அன்ட்ரூ பிளெட்சர் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு சில்லெட் சிக்ஸர்ஸ் அணி கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுக்களால் த்ரில்லர் வெற்றியொன்றினை பதிவு செய்துள்ளது.

ஐந்தாவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 கிரிக்கெட் தொடரின் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 4) முதல் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.  

உபுல் தரங்க, பிளெட்சரின் அபார துடுப்பாட்டத்தால் சில்லெட் அணிக்கு முதல் வெற்றி

ஐந்தாவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T-20 தொடர் இன்று ஆரம்பமாகி…

தொடரின் முதல் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணியினரை 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியிருந்த சில்லெட்ஸ் சிக்ஸர்ஸ் அணி கொமில்லா விக்டோரியன்ஸ் அணியின் முதற்போட்டியில் நல்ல முடிவுகளைப் பெறும் நோக்கோடு பங்கெடுத்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (5) சில்லெட் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சில்லெட் சிக்ஸர்ஸ் அணியின் தலைவர் நஸீர் ஹூசைன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியிருந்த கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்கு மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த மேற்கிந்திய தீவுகளின் மர்லோன் சாமுவேல்ஸ் வலுவளித்தார். 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களினை சாமுவேல்ஸ் விளாசியமை குறிப்பிடத்தக்கது.

இவரோடு சேர்த்து தொடர்ந்து துரித கதியில் துடுப்பாடிய அலோக் கபாலி 19 பந்துகளில் பெற்றுத்தந்த பெறுமதியான 26 ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்த கொமில்லா விக்டோரியன்ஸ் அணி 145  ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.  

பின்வரிசையில் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களினை சேர்க்க தவறியிருந்த கொமில்லா விக்டோரியன்ஸ் அணியின் விக்கெட்டுகளில் சில்லெட் சிக்ஸர்ஸ் சார்பாக தலா இரண்டு வீதம் கிரிஷ்மார் ஷன்டோக்கி மற்றும் தய்ஜூல் இஸ்லாம்ஆகியோர் கைப்பற்றியிருந்தனர்.

இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்

இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கொல்கத்தாவில்…

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 146 ஓட்டங்களினை பெற பதிலுக்கு ஆடியிருந்த சில்லெட் சிக்ஸர்ஸ் அணி இலங்கை அணியின் ஒரு நாள் தலைவர் உபுல் தரங்க மற்றும் அன்ட்ரூ ப்ளெச்சர் ஆகியோர் 73 ஓட்டங்கள் என்கிற ஆரம்ப இணைப்பாட்டத்தை பெற்று தமது தரப்பின் இலக்கு எட்டும் பயணத்துக்கு நல்ல தொடக்கத்தினை தந்திருந்தனர்.

தனது சக அணி வீரரான டர்ரேன் பிராவோவினால் வீழ்த்ப்பட்ட அன்ட்ரூ பிளெட்சர் 29 பந்துகளில் 36 ஓட்டங்களினை குவித்து சில்லெட் சிக்ஸர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்தார்.

இதனை அடுத்து மைதானம் விரைந்த சப்பீர் ரஹ்மான் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபியினால் வீழ்த்தப்பட்டு வெறும் 3 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

இன்னும் சில்லெட்ஸ் சிக்ஸர்ஸ் அணிக்காக அரைச்சதம் கடந்து  வெற்றியிலக்கினை நோக்கி நெருங்க முயற்சித்துக்கொண்டிருந்த உபுல் தரங்கவும் ரன் அவுட் முறையில் துரதிஷ்டவசமாக மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

அதோடு ராஷித் கான், டர்ரன் ப்ராவோ ஆகியோர் மேலும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்த சில்லெட்ஸ் சிக்ஸர் அணிக்கு சாதகமான போட்டி மிகவும் இறுக்கமான நிலைக்கு மாறியிருந்தது.

இதனால் போட்டியின் இறுதி 5 பந்துகளுக்கும் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் அந்த ஓட்டங்களின் பெரும்பகுதியினை புதிய துடுப்பாட்ட வீரராக மைதானம் நுழைந்த நூருல் ஹசன் பெற்றுத்தர ஒரு பந்து மாத்திரம் மீதியிருந்தவாறு 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து சில்லெட் சிக்ஸர்ஸ் அணி 148 ஓட்டங்களுடன் பரபரப்பான வெற்றியொன்றினை சுவைத்திருந்தது.

சில்லெட் சிக்ஸர்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக உபுல் தரங்க 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

கொமில்லா விக்டோரியன்ஸ் அணி சார்பான பந்துவீச்சில் டர்ரன் ப்ராவோ 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் மூலம் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்ய உதவிய உபுல் தரங்க இந்தப் போட்டியிலும் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

சில்லெட் சிக்ஸர்ஸ் அணி தமது முதல் போட்டியிலும் உபுல் தரங்க பெற்ற அரைச்சதத்தின் உதவியுடனேயே இலகு வெற்றியினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொமில்லா விக்டோரியன்ஸ் – 145/6 (20) மர்லோன் சாமுவேல்ஸ் 60(47), அலோக் கபாலி 26(19), தய்ஜூல் இஸ்லாம் 20/2 (4), கிரிஷ்மார் ஷன்டோக்கி 2/30(4)

சில்லெட் சிக்ஸர்ஸ் – 148/6 (19.5) உபுல் தரங்க 51(40), அன்ட்ரூ பிளெட்சர் 36(29, டர்ரன் ப்ராவோ 34/2(3.5)

போட்டி முடிவுசில்லெட் சிக்ஸர்ஸ் அணி 4  விக்கெட்டுக்களால் வெற்றி