மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம் தமது 44ஆவது வருட நினைவையொட்டி மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை மன்னார் லீக்கின் அனுமதியுடன் நடாத்தியது. இதில் மன்னார் லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களில் 36 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.

இந்த சுற்றுப் போட்டியானது கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் விடத்தல்தீவு பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய அணிகள் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விலகல் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

காலிறுதிச் சுற்று

குழு A யில் முதலாவது காலிறுதிப் போட்டியில் மன்னாரின் நடப்பு சம்பியன் பள்ளிமுனை சென்.லூசியா அணியை எதிர்த்து தோட்டவெளி ஐக்கிய அணி மோதியது. இதில் இரண்டு அணிகளும் போட்டி நேர முடிவின்போது எதுவித கோல்களையும் போடாத காரணத்தினால் சமனிலை தவிர்ப்பு உதை (பெனால்டி) மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் தோட்டவெளி ஐக்கிய அணியானது 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

A குழுவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் விடத்தல்தீவு புதிய ஐக்கிய அணியை எதிர்த்து முருங்கன் பொதுசன சேவைகள் அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடாததால் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் முருங்கன் பொதுசன சேவைகள் அணி 4-3 எனும் கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

B குழுவின் முதலாவது காலிறுதிப் போட்டியில் காத்தாங்குளம் சென்.ஜோசப் அணியை எதிர்த்து விடத்தல்தீவு ஐக்கிய அணி மோதியது. இதன் முதல் பாதியில் ஐக்கிய அணியின் வின்சன் பற்றிக் பெற்றுக்கொடுத்த கோலின் மூலம்  1-0 எனும் நிலையில் ஐக்கிய விளையாட்டுக் கழகம் முன்னிலைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியாட்டத்தில் மீண்டும் ஐக்கிய அணியின் வின்சன் பற்றிக் மற்றுமொரு கோலையும் பெற்றுக்கொடுத்து தனது அணியை பலப்படுத்தினார். இறுதியில் ஐக்கிய அணி 2-0 எனும் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

அக்குழுவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் அடம்பன் டிலாசால் அணியை எதிர்த்து வங்காலை சென்.ஆன்ஸ் அணி மோதியது. போட்டி நேர முடிவின்போது இரு அணிகளும் தலா ஒரு கோலினை போட்டதனால் ஆட்டம் சமநிலையில் முடிவுபெற்றது. பின்னர் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட, அதில் 4-1 எனும் கோல்கள் கணக்கில் வங்காலை சென்.ஆன்ஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

அரையிறுதிச் சுற்று

முதலாவது அரையிறுதிப் போட்டியில் விடத்தல்தீவு ஐக்கிய அணியும் வங்காலை சென்.ஆன்ஸ் அணியும் மோதின. போட்டி ஆரம்பமாகிய வேகத்திலேயே 8ஆவது நிமிடத்தில் சென்.ஆன்ஸ் அணியின் அனஸ்ரியன் லாபகமாக கோல் ஒன்றினை பெற்றுக்கொடுத்து, தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

சுற்றுத் தொடரை நடாத்தும் ஐக்கிய அணி பின்னிலை வகிக்க, திரண்டிருந்த ரசிகர்களின் ஆக்ரோசமான ஆதரவு ஐக்கிய அணி வீரர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்தது. போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ஐக்கிய அணியின் நிதர்சன் கோல் ஒன்றினை போட, ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது.

பின்னர் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இரண்டாம் பாதியில் அதே உற்சாகத்தில் களமிறங்கிய ஐக்கிய அணி மீண்டும் ஒரு கோலினை பெற்று, போட்டியை 2-1 என நிறைவுறச் செய்து இறுதிப் போட்டிக்கத் தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது தோட்டவெளி ஐக்கிய அணிக்கும் முருங்கன் பொதுசன சேவைகள் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் போட்டி ஆரம்பித்து 10ஆவது நிமிடத்தில் நிரோசன் குருவின் எதிர்பாராத கோலின் மூலம் பொதுசன சேவைகள் அணி 1-0 என முன்னிலை வகிக்க ஆட்டம் விறுவிறுப்பானது.

முதல் பாதி முடிவடைவதற்கு 03 நிமிடத்திற்கு முன்னர் ஐக்கிய அணியின் ரெக்சனின் சிறப்பான கோல் ஒன்றின் மூலம் போட்டியின் முதல் பாதியானது 1-1 என சமனிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் வெற்றிக்கான கோலினை போடுவதற்கு முயற்சித்த வேளையில், அதிஷ்டவசமாக போட்டி முடிவடைவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் பொதுசன சேவைகள் அணிக்கு தண்ட உதை வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனை சிறப்பாக பயன்படுத்திய அமல், வாய்ப்பை கோலாக மாற்றி அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

பின்னர் ஐக்கிய அணியினர் இறுதிவரை போராடியிருந்தும், அவர்களது முயற்சிகள் பொதுசன அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் தகர்க்கப்பட்டன. இறுதியில் பொதுசன சேவைகள் அணி 2-1 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

இறுதிப் போட்டி

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவலர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க, முருங்கன் பொதுசன சேவைகள் அணிக்கும் போட்டித் தொடரை நடாத்தும் ஐக்கிய அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி வெகு விமர்சையாக ஆரம்பமானது.

மைதானத்தில் குவிந்திருந்த தங்களின் ரசிர்களின் ஆதரவுடன் களமிரங்கிய ஐக்கிய அணிக்கு, பொதுசன சேவைகள் அணியுடன் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. இரண்டு அணிகளும் சம்பியன் பட்டத்தினை பெற வேண்டும் என்ற கனவோடு விளையாட போட்டியானது விறு விறுப்பின் உச்ச கட்டத்தினை அடைந்தது.

முதல் பாதி முடிவுற்ற நிலையில் இரு அணிகளும் எதுவித கோலினையும் போடாமல் சமனிலையில் காணப்பட்டது.

பின்னர் இடம்பெற்ற இரண்டாம் பாதியிலும் இரு அணி வீர்ர்களும் மிகவும் போராட்டத்துடன் தமது திறமையை வெளிப்படுத்தினர். இரு தரப்பினரின் தடுப்பாட்டங்களினால் எந்தவொரு அணிக்கும் கோல் போட முடியாமல் போனது.

எனவே, ஆட்ட நேரம் முடிவடைந்ததும் இரு அணிகளும் சமநிலையடைந்தது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.

சமனிலை தவிர்ப்பு உதை

  • ஐக்கியம் அணியின் அலக்ஸ் முதலாவது உதையை கோலாக மாற்றினார். (1-0)
  • பின்னர் பொதுசன சேவைகள் அணியின் அன்பும் தனது வாய்ப்பையும் கோலா மாற்றினார். (1-1)
  • ஐக்கிய அணியின் வின்சன்பற்றிக் கோல் போட, தனது பங்கிற்கு பொதுசன சேவைகள் அணியின் வசந்தனும் கோலினை போட்டார். (2-2)
  • ஐக்கிய அணி சார்பாக கலிஸ்டர் அடித்த பந்தை பொதுசன சேவைகள் அணியின் கோல் காப்பாளர் சிறப்பான முறையில் பாய்ந்து தடுத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். (2-2)
  • தொடந்து வந்த பொதுசன சேவைகள் அணியின் ஜெசிந்தன் கோல் கம்பத்திற்கு வெளியே அடித்து மீண்டும் போட்டியை சமனிலைப்படுத்தினார். (2-2)
  • ஐக்கிய அணியின் டெல்சன் அடித்த சமனிலை தவிர்ப்பு உதையானது கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது. (2-2)
  • பதிலுக்கு நிதர்சனின் உதை, கோல் காப்பாளருக்கு நேராக வந்திருந்தும் கோல் காப்பாளர் பந்தைப் பிடிக்க தவறியதினால் அது கோலாக மாறியது. இதன் மூலம் பொதுசன சேவைகள் அணி 3-2 என முன்னிலை வகித்தது. (2-3)
  • ஐக்கிய அணியின் இறுதி வீரரும் கோல் கம்பத்திற்கு வெளியே பந்தை உதைத்தார். (2-3)

பின்னர் வந்த பொதுசன அணியின் அமல் தமது வாய்ப்பை கோலாக மாற்றி 4-2 என அணியை முன்னிலைப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன் காரணமாக பொதுசன அணி விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் 44ஆவது வருட நினைவுக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியன் பட்டத்தைப் பெற்றது.